செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (11:16 IST)

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர்களுக்கு ஆன்டிபாடி – முதல்முறையாக தொடங்கிய பரிசோதனை

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த பத்து பேருக்கு, அவசர பாதுகாப்புக்காக, ஆன்டிபாடிக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற சோதனை முறை நடைபெறுவது இதுவே முதல்முறை.
 
கடந்த எட்டு நாட்களில், யார் எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தார்களோ அவர்களுக்கு இந்த சோதனை மருந்து வழங்கப்படும்.
 
இந்த சோதனையில் நல்ல முன்னேற்றம் இருந்தால், கொரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கும் மக்கள் மற்றும் இதுவரை கொரோனா தடுப்பு மருந்து பெறாதவர்கள் அல்லது பெற முடியாதவர்களை பாதுகாக்கும். அதோடு வைரஸ் பரவுவதையும் குறைக்க உதவும்.
 
இந்த சோதனை பிரிட்டனில், யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் ஹாஸ்பிட்டல்ஸ் (யூசிஎல்ஹெச்) என்ஹெச்எஸ் ட்ரஸ்டில் நடந்து கொண்டிருக்கிறது.
 
இருவேறு ஆன்டிபாடிக்களை கொரோனா தொற்றுள்ள ஒருவரின் உடலில் செலுத்தினால், அவர் உடலில் கொரோனா வளர்வதை தடுக்குமா அல்லது குறைந்தபட்சம் அவர் உடல் நிலை மோசமடைவதையாவது தடுக்குமா என இந்த ஆய்வில் சோதித்துப் பார்க்கப்படுகிறது.
 
கொரோனா தடுப்பு மருந்து ஒருவரின் உடலை முழுமையாகப் பாதுகாக்க வாரக் கணக்கில் கால அவகாசம் தேவை. அதாவது, ஒருவர் உடலில் ஏற்கனவே கொரோனா மேம்பட்டுக் கொண்டிருந்தால், கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பது மிகவும் தாமதமான முடிவு.
 
ஆஸ்ட்ராசெனிகா மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ’மோனோகுளோனல் ஆன்டிபாடி சிகிச்சை’ முறை, கொரோனா வைரஸை உடனடியாகச் செயல்படவிடாமல் தடுக்கும். அதோடு ஓர் ஆண்டு காலம் வரை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
 
கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சையளிக்கலாம்.
 
மாணவர்கள் தங்கும் விடுதிகளில், ஒரு சிலருக்கும் கொரோனா வந்தால் கூட அது மிகப் பெரிய பரவலை ஏற்படுத்தும். அவைகளைத் தடுக்க இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தலாம்.
 
யூ சி எல் ஹெச்-ஐ சேர்ந்த வைராலஜிஸ்ட் மருத்துவர் கேத்தரின் ஹொலிஹன் தலைமையிலான குழு, இந்த சோதனையை மேற்கொள்ள 1,000 தன்னார்வலர்களைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.
 
அதிலும் மருத்துவமனைகள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகள் போன்ற கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பிருக்கும் இடங்களில் இருந்து தன்னார்வலர்களைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.
 
இந்த சோதனையில் தன்னார்வலராகச் சேர விரும்புபவர்கள், அவர்களோடு தொடர்பு கொண்ட யாராவது ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
இந்த தடுப்பு மருந்து, ஆன்டிபாடிக்களை தானமாகக் கொடுப்பது மூலம் செயல்படும் என்கிறார் மருத்துவர் ஹொலிஹன்.
 
”இந்த ஆன்டிபாடிக்கள் இணை, கொரோனா வைரஸை செயலற்றதாக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இந்த ஆன்டிபாடிக்களை ஊசி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு கொடுத்தால், உடனடியாக அவர்கள் உடலில் கொரோனா மேம்படுவதிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமா? என்பதைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்,”
 
கர்பிணிப் பெண்கள், வெறி நாய்க்கடி மற்றும் அம்மை போன்ற நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இந்த சிகிச்சை முறையை ஏற்கனவே வழங்கி இருக்கிறார்கள் என விளக்குகிறார் ஹொலிஹன்.
 
வைரஸ் பரவவுவதற்கு முன்
ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன், அவருக்கு இதே ஆன்டிபாடி சிகிச்சையை வழங்கினால், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பார்களா? என யூசிஎல்ஹெச்-ல் மற்றொரு சோதனையும் நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் கீமோதெரப்பி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
 
புற்றுநோய் & ஹெச்.ஐ.வி தொற்றுள்ள பலருக்கும் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது, ”இது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு பலன் அளிக்க வைக்கலாம்,” என்கிறார் இந்த சோதனையை நடத்தி வரும் தொற்றுநோயியல் ஆலோசகர் மருத்துவர் நிக்கி லாங்லி.
 
”யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பு மருந்து வேலை செய்யாமல் போகுமோ, அவர்களுக்கு எல்லாம் ஒரு பாதுகாப்பு போல இந்த சிகிச்சை முறையை வழங்கலாம். இதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.” என்கிறார் லாங்லி.
 
கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்படுவதற்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பவர்களைப் பாதுகாக்க இந்த சிகிச்சை முறை உதவியாக இருக்கலாம் என்கிறார் ஹொலிஹன்.
 
ஆனால், இந்த சிகிச்சை முறையை கொரோனா தடுப்பு மருந்துக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படவில்லை எனவும் குறிப்பிடுகிறார் ஹொலிஹன். அதோடு ஒரு டோஸ் ஆன்டிபாடியைப் பெறுவதற்கு அதிக அளவில் செலவழிக்க வேண்டி இருக்கும் என்பதையும் குறிப்பிடுகிறார்.
 
பிரிட்டனின் சில பகுதிகளிலும், அமெரிக்காவிலும் இந்த ஆன்டிபாடி சோதனைகள் நடத்தப்படும்.
 
ஆனால் இப்போதைக்கு லண்டன் நகரத்தில் மட்டுமே இந்த சோதனைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆன்டிபாடி மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்த இரு சோதனைக்கான முதற்கட்ட முடிவுகள், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.