வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (15:20 IST)

டிக்டாக்கால் காணாமல் போய் 2 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த வாய் பேச முடியாத முதியவர்

இந்தியாவில் பலர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி மகிழ்கின்றனர்பலர் விமர்சிக்கின்றனர்ஆனால் தெலங்கானாவில் உள்ள இந்த குடும்பம் டிக் டாக் செயலிக்கும் அதில் ஒரு குறிப்பிட்ட காணொளியை பதிவு செய்தவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இரண்டு வருடங்களாக காணாமல் போன தங்கள் தந்தையை கண்டுபிடிக்க ஒரு டிக் டாக் காணொளி உதவியுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.

பஞ்சாபின் லூதியானா நகரில் உள்ள பாலம் ஒன்றிற்கு கீழ் வீடற்ற பலர் தங்கியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு 55 வயது நபர் ஒருவர் அங்கு சென்று சேர்ந்துள்ளார். அவருக்கு பஞ்சாபி மொழி பேச தெரியவில்லை என்பதை அங்குள்ளவர்கள் புரிந்துகொண்டனர்.

அவர் ஒரு பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி என்பதையும் அறிந்துகொண்டனர். எனவே அவர் யார் எங்கிருந்து வந்துள்ளார் என்பதையெல்லாம் கேட்காமல் அங்கிருந்தவர்கள் அந்த நபரை லூதியானாவிலேயே தங்கவைத்துள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஆதரவற்றோருக்கு பலர் உணவளித்து உதவி வருகின்றனர்.

அதே போல பஞ்சாபில் உள்ள காவல்துறை அதிகாரியான அஜெய்ப் சிங், லூதியானா நகரில் ஆதரவின்றி சாலையில் வசிக்கிறவர்களுக்கு உணவு அளித்து உதவியுள்ளார்.

அஜெய்ப் சிங் உணவு அளிப்பதை, குர்பிரித் சிங் என்பவர் காணொளியாக பதிவு செய்து அதை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். ஆதரவற்றோருக்கு உணவு அளித்து உதவுவதை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதன் மூலம் ஆதரவற்றோருக்கு உணவு அளித்து உதவ வேண்டும் என்ற எண்ணமும் ஊக்கமும் பலருக்கு ஏற்படும் என காவலர் அஜெய்ப் சிங் நம்புகிறார்.

ஆனால் அந்த காணொளியால் இரண்டு ஆண்டுகள் தந்தையை பிரிந்து வாழும் ஒருவருக்கு மீண்டும் தன் தந்தையுடன் சேர வாய்ப்பு கிடைக்கும் என அஜெய்ப் சிங் எதிர்பார்க்கவில்லை. பஞ்சாபில் உள்ள தந்தையை தெலங்கானாவில் உள்ள மகன் கண்டுபிடிக்க டிக் டாக் செயலி உதவியுள்ளது.

தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள பினபாகா எனும் கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திர பாபு என்பவர் இந்த காணொளியை முதலில் பார்த்துள்ளார்.

காணொளியில் உணவு வாங்கி உண்பவர் தன் நண்பனின் தந்தையை போல் உள்ளதே என்ற சந்தேகத்தில் அந்த காணொளியை தன் நண்பர் ரொட்டா பெத்திராஜுவிடம் பகிர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் ரொட்டா வெங்கடேஷ்வரலு .

வெங்கடேஷ்வரலுவின் குடும்பத்தினர் காணொளியை பார்த்துவிட்டு ஆனந்தத்தில் கண்கலங்கியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வெங்கடேஷ்வரலு ஒரு கூலி தொழிலாளி. அவர் தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் தெலங்கானாவில் வசித்து வந்துள்ளார். ஒரு நாள் பணியை முடித்துவிட்டு, அருகில் இருந்த லாரி ஒன்றில் தூங்கியுள்ளார். அந்த லாரி வெங்கடேஷ்வரலு இருப்பது தெரியாமல் வேறு மாநிலத்திற்கே சென்றுள்ளது.

பிறகு வெங்கடேஷ்வரலு பாதியில் இறக்கி விடப்பட்டுள்ளார். ஆனால் அவரால் சைகை மொழியில் மட்டுமே பேச முடியும் என்பதால், அவரின் சொந்த ஊர் குறித்து வெங்கடேஷ்வரலு கூறியது யாருக்கும் புரியவில்லை.

மற்றொரு வாகனத்தை பிடித்து அந்த வாகனம் அவரை தெலங்கானா சென்றடைய உதவும் என நினைத்து பயணம் செய்துள்ளார். ஆனால் அந்த வாகனம் அவரை பஞ்சாபின் லூதியானாவில் இறக்கிவிட்டு சென்றுள்ளது. இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன.

வெங்கடேஷ்வரலுவின் மகன் காணாமல் போன தந்தை தொடர்பாக தெலங்கானா காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினரின் முயற்சி பலனளிக்கவில்லை.

ஊரடங்கு அமலில் இருந்தபோதும் பெத்திராஜு தன் அலுவக நண்பர்கள் மற்றும் பஞ்சாபின் காவல் துறையினர் உதவியால் முதலில் தன் தந்தையுடன் காணொளி மூலம் உரையாடியுள்ளார்.

தன் தந்தை சைகையிலேயே தன்னை வந்து அழைத்து செல்லும்படி கூறியதால், உடனே காவல் துறையினரிடம் அனுமதி பெற்று பஞ்சாப் சென்றுள்ளார். தன் தந்தை வெங்கடேஷ்வரலுவை கார் மூலம் பஞ்சாபில் இருந்து கடந்த வாரம் தெலங்கானா அழைத்து வந்துவிட்டார். இப்போது எல்லாம் சுபம்.