அமெரிக்க அதிகாரிகள் யாரும் அதிபரை பார்க்கவில்லை: கிம் குறித்து தகவல்!
அமெரிக்க அதிகாரிகள் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சமீபத்தில் பார்க்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கிம் உடல்நிலை குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். வட கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் அல்லது பஞ்சம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று மோசமாக பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
36 வயதான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடைசியாக ஏப்ரல் 12ஆம் தேதி அரசு ஊடகத்தில் தோன்றினார்; இது அவரின் உடல்நிலை மோசமாக உள்ளது என யூகங்கள் பரவ வித்திட்டது. ஆனால் அந்த தகவல்களில் உண்மையில்லை என வட கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க வடகொரிய அதிபர் கிம் கடற்கரையில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருக்கலாம் என்றும் செய்திகள் வலம் வருகின்றன. ஜனவரி மாதம் வட கொரியா தனது எல்லைகளை மூடியது. திங்களன்று கிம்மின் உடல்நிலை குறித்து தனக்கு நல்ல எண்ணங்களே உள்ளன என்றும்,ஆனால் தன்னால் அதுகுறித்து பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும், "அவர் நலமுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்." என்று தெரிவித்தார். ஏப்ரல் 15 ஆம் தேதி வடகொரியாவின் நிறுவனரும், கிம்மிற்கு தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இது அந்த நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு; கிம் ஜாங் உன்னும் அதில் தவறாமல் கலந்து கொள்வார் எனவே அங்கிருந்துதான் கிம்மின் உடல்நலம் குறித்த சந்தேகங்கள் வெளியாகின.