திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (10:27 IST)

மது குடித்த தாத்தா, 5 வயது பேரன் மரணம் - என்ன நடந்தது?

குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் - விஜயா தம்பதிர். இவர்களுக்கு ரூத்தேஷ் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவன் ரூத்தேஷின் தாத்தா சின்னசாமி (வயது 62) வீட்டில் மது அருந்தியுள்ளார்.
 
பிறகு பாட்டிலில் மீதமிருந்த மதுவை அப்படியே வைத்துவிட்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் கவனக்குறைவாக தாத்தா வைத்திருந்த மது சிறுவன் கண்ணில் பட்டுள்ளது. பிறகு பேரன் ரீத்தேஷ் குளிர்பானம் என்று நினைத்து அந்த மதுவை குடித்துள்ளார்.
 
மதுவை குடித்தவுடன் சிறுவனுக்கு புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட குடும்பத்தினர் முதியவரை கடுமையாக திட்டிவிட்டு சிறுவனை கவனித்துள்ளனர். மறுபுறம் முதியவர் சின்னசாமி மயங்கி கீழே விழுந்துள்ளார். சிறுவனுக்கும் மூச்சுத் திணறல் விடாமல் நீடித்ததால், உடனடியாக ரூத்தேஷ், சின்னசாமி ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் முதியவர் சின்னசாமி ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
சிறுவன் ரூத்தேஷின் உடல்நிலை மோசம் அடையவே, மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் உயிரிழந்தார்.
 
மது உட்கொண்ட நிலையில் தாத்தா மற்றும் பேரன்‌ இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது குறித்து வேலூர் திருவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 
என்ன நடந்தது?
இந்த விவகாரம் குறித்து காவல் துறை தரப்பிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இந்த சம்பவத்தில் தாத்தா மற்றும் மகள் வழி பேரன் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த முதியவருக்கு ஏற்கெனவே இதய கோளாறு உள்ளது. ஆனாலும் அவர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று டாஸ்மாக்கில் வாங்கிய மதுவை முதியவர் வீட்டில் அருந்திவிட்டு, மீதமிருந்த கொஞ்சம் மதுவை பாட்டிலோடு வைத்துள்ளார். இதை பேரன் குளிர்பானம் என்று நினைத்து அருந்தியதால் புரையேறி தொடர்ந்து இருமல் வந்துகொண்டிருந்தது. இதனால் முதியவரை வீட்டிலிருந்தவர்கள் திட்டியுள்ளனர். இதற்கிடையில் பேரன் நிலையை பார்த்த அதிர்ச்சியில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
 
பிறகு இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் தாத்தா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். மேலும் பேரன் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். தற்போது வந்துள்ள உடற்கூராய்வு அறிக்கையில், முதியவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்றும், பேரன் மது உட்கொண்டதால் ஏற்பட்ட தொடர் புரை காரணமாக உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்," என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்த சூழலில் நடந்த சம்பவத்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "வேலூர் மாவட்டம் திருவலத்தில் தவறுதலாக மது குடித்த குழந்தையும், தாத்தாவும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மது கொடுமையிலும் கொடுமை; இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா? மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது? மக்கள் நிம்மதியாக வாழ்வது எப்போது?," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழ்நாட்டில் இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை மூடுக என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், "தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது தான் தாத்தாவும், பெயரனும் உயிரிழப்பதற்கு காரணம் ஆகும். ஒரே நேரத்தில் தாத்தாவையும், பெயரனையும் இழந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகத்தை யாராலும் போக்க முடியாது. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மதுக்கடைகளை திறந்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வரும் தமிழ்நாடு அரசு தான், இந்த இரட்டை உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
 
தமிழ்நாட்டில் மட்டும் மது குடிப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஏராளமான பெண்கள் இளம் வயதில் கைம்பெண்களாகின்றனர். 200 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. குடும்ப வன்முறையும், வறுமையும் பெருகுகின்றன; தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 10 முதல் 20 விழுக்காடு வரை குறைகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மதுவால் கிடைக்கும் வருமானத்திற்காக மது வணிகத்தை அரசு தொடர்வது பெருங்கேடானது.
 
பாமக கொள்கையைப் பின்பற்றி தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவிலக்கை ஆதரிக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சரும் மது விலக்கை வலியுறுத்தியவர் தான். இப்போதும் மதுவிலக்கில் அவருக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
 
எனவே, தமிழ்நாட்டில் இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை உறுதி செய்யவும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுக்கடைகளை ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.