வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (20:19 IST)

தயாநிதி மாறன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யலாம்: உச்சநீதிமன்றம்

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதைத் தடுக்கும்படி கோரிய திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் கோரிக்கையை இந்திய உச்சநீதிமன்றம் வியாழனன்று நிராகரித்துள்ளது.
 
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னமும் முழுமையடையவில்லை என்றும், குறிப்பாக இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் மலேஷியாவில் முடிவடையாத நிலையில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படக் கூடாது என தயாநிதி மாறனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
ஒரு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு சட்டப்படி தடை விதிக்க முடியாது என்றும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், மனுதாரர் முறையிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்ததாக குற்றஞ்சாட்டித் தொடரப்பட்ட வழக்கில், தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
 
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை, இந்தியாவில் முழுவதுமாக முடிவுற்றுள்ள போதும், மலேசியா நாட்டில் நடைபெற்று வரும் விசாரணை இன்னமும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தயாநதி மாறன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மலேசியாவில் விசாரணை நடைபெற்று முடியும் வரை தன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்டே மற்றும் ஏ.எம்.சாப்ரே ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு, இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதற்கு எதிராக மனு தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளது.