சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலம், கொரோனா வைரஸை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வரும் என்று அஞ்சுகிறது வட கொரியா.
இதனால், தங்கள் நாட்டு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.
வெளி உலகத்துடன் பெரிதும் தொடர்பற்று வாழும் வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸே இல்லை என்று கூறிவந்தது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே எல்லைகளை கண்டிப்புடன் மூடிவைத்துள்ளதோடு, நடமாட்டத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பருவம்தோறும் வீசும் இந்த தூசு படலத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது. ஆனால், தூசு படலத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருப்பதாக வட கொரியா மட்டுமே கருதவில்லை.
வைரஸ் கலந்த தூசு படலத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே தங்கள் நாட்டு மக்களை முகக் கவசம் அணியும்படி வலியுறுத்துவதாக துர்க்மெனிஸ்தான் கூட கூறுகிறது. பிழையான தகவல்கள் தொடர்பாக ஆராயும் பிபிசி குழு இத்தகவலைத் தெரிவிக்கிறது. கொள்ளை நோயை மூடி மறைக்க முயல்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் இந்நாடு மறுக்கிறது.
'தீங்கு விளைவிக்கும் வைரஸ்'
மஞ்சள் தூசு படலம் அடுத்த நாள் நாட்டுக்குள் வீச இருப்பதாக அரசு ஊடகமான கே.சி.டி.வி. புதன்கிழமை ஒளிபரப்பிய சிறப்புத் தட்பவெட்ப அறிக்கையில் தெரிவித்தது. அத்துடன் வெளிப்புறக் கட்டுமானப் பணிகளுக்கும் தடைவிதித்தது வட கொரியா.
மங்கோலியா மற்றும் சீன பாலைவனங்களில் இருந்து வீசும் மணலே மஞ்சள் தூசு படலம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வட மற்றும் தென் கொரியாவில் வீசும் இந்த தூசு படலத்தின் பயணத்தில் அதனுடன் நச்சு தூசியும் கலக்கிறது. இந்த தூசு படலம் இரு நாடுகளிலும் சுகாதார சிக்கலாக உருவெடுத்துள்ளது.
நாட்டின் மீது படையெடுக்கும் இந்த தூசு படலம் ஏற்படுத்தும் ஆபத்துகளை எல்லா தொழிலாளர்களும் தெளிவாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று அரசு செய்தித் தாளான ரோடாங் சின்முன் வியாழக்கிழமை கூறியது.
தூசு படலம் தொடர்பாக வட கொரிய அரசுக்கு உள்ள கவலைகள் குறித்து தங்களுக்கு எச்சரிக்கைகள் வந்ததாக அங்குள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும் அறிக்கை அளித்துள்ளன. இந்த தூசு புயல் குறித்து தங்களையும், பிற வெளிநாட்டுத் தூதரகங்களையும், சர்வதேச அமைப்புகளையும் வட கொரிய அரசு எச்சரித்துள்ளதாக ரஷ்ய தூதரகம் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்து வெளிநாட்டினரும் வீட்டுக்குள்ளேயே இருக்கேண்டும் என்றும், தங்கள் ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைக்கவேண்டும் என்றும் வடகொரிய அரசு கேட்டுக்கொள்ளது.
தூசு படலம் கொரோனா வைரஸை கொண்டு வருமா?
காற்றின் மூலமாக கொரோனா வைரஸ் பரவ சாத்தியம் இருப்பதாக வெளியான ஆய்வு முடிவுகளை இணைத்துப் பார்த்து வட கொரியாவை நோக்கி வரும் மஞ்சள் தூசு படலத்தை காத்திரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று என்.கே.நியூஸ் என்ற சிறப்பு செய்தித் தளம் கூறுகிறது.
கொரோனா வைரஸ் காற்றில் பல மணி நேரங்களுக்கு இருப்பது சாத்தியம் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரம், இதன் மூலம் ஒருவருக்கு தொற்று ஏற்படுவதற்கு சாத்தியம், அதுவும் வெளிப்புறப் பகுதியில் இதற்கான சாத்தியம், மிக மிக குறைவு என்றும் அந்த மையம் கூறியுள்ளது.
கொரோனா தொற்றிய ஒருவருடன் நெருக்கமாக இருப்பது, அந்த தொற்று பாதித்த நபர் தும்முவது, இறுமுவது, பேசுவது ஆகிய செயல்களை செய்யும்போது சிதறும் நுண் திவளைகள் வாயிலாக அருகில் உள்ளவர்களுக்கு பரவுவதுதான் முதன்மையாக கோவிட் 19 பரவும் முறை.
சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு மண்டலம் வட கொரியாவில் கொரோனாவை பரப்புவது சாத்தியமில்லாதது என தென் கொரிய ஊடகங்கள் கூறுவதாக என்.கே. நியூஸ் தெரிவிக்கிறது.
தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பே இல்லை என்று வட கொரியா கூறிவந்தாலும், வட கொரியாவில் இந்த நோய் குறித்த ஆழமான அச்சம் நிலவுகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் உயர்மட்டக் கூட்டங்களை நடத்துகிறார்.
வட கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பே சுத்தமாக இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதற்கிடையே இந்த தூசு படலம் வார இறுதிவரை வீசும் என்று முன் கணிக்கப்பட்டாலும், இது வெள்ளிக்கிழமையே கொரிய தீபகற்பத்தைக் கடந்து சென்றுவிட்டது.