வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (10:54 IST)

தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு நீரிழிவு நோய்: எச்சரிக்கை மணி அடிக்கும் ஐசிஎம்ஆர் ஆய்வு!

இந்திய அளவில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோரும் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமானோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
 
இந்தியாவில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வு குறித்த விரிவான அறிக்கை INdia DIABetes [INDIAB] Study என்ற பெயரில் மிகப் பிரபலமான மருத்துவ இதழான தி லான்செட் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள 1,13,043 நபர்களிடம் 18 ஆக்டோபர் 2008 முதல் 17 டிசம்பர் 2020 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
நகர்ப்புறங்களில் இருந்து 33,537 பேரும், கிராமப்புறங்களில் இருந்து 79,506 பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஆய்வு ஐந்து கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது.
 
ஆய்வில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்கள்
உயர் ரத்த அழுத்தத்தைப் பொறுத்த வரையில் இந்தியாவில் 35.5 சதவீத பேருக்கு (31.5 கோடி) அந்தப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாபில் அதிகபட்சமாக 51.8 சதவீத பேரும், குறைந்தபட்சமாக மேகாலயாவில் 24.3 சதவீத பேரும் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
 
உடல் பருமன் நோயால் தேசிய அளவில் 28.6 சதவீதத்தினர் (25.4 கோடி) பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 53.3 சதவீதத்தினரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 11.6 சதவீதத்தினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தேசிய அளவில் 39.5 சதவீதம் (35.1 கோடி) நபர்களுக்கு அடி வயிற்றில் உடல் பருமன் பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக புதுச்சேரி மாநிலத்தில் 61.2 சதவீதத்தினருக்கும் குறைந்தபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 18.4 சதவீதத்தினருக்கும் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவா மாநிலத்தில் 26.4 சதவீதம் பேரும் குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில் 4.8 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவில் 15.3 சதவீதம் பேர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் (Pre diabetes) இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்த நிலையில். அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 31.3 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 6.8 சதவீதம் பேரும் நீரிழிவுக்கு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலை நிலையில் உள்ளனர்.
 
தமிழகத்தின் நிலை என்ன?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் அளவு 14.4 சதவீதமாக உள்ளது.
 
நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் ஏற்படும் விகிதம் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களின் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. நகர்ப்புறங்களில் இது 10 முதல் 14.9 வரையும், கிராமப்புறங்களில் இது 5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது.
 
குறிப்பாக, கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை கிராமப்புறங்களில்தான் அதிகமாக உள்ளது.
 
"இந்தியாவில் எந்தளவுக்கு தொற்றா நோய்களின் சுமை இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக இந்த ஆய்வைத் தொடங்கினோம்," என்று கூறுகிறார், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரும் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குநரும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் (MDRF) தலைவருமான மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா.
 
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "முதலில் வட இந்தியாவில் ஒரு மாநிலம், தென்னிந்தியாவில் ஒரு மாநிலம் என நாங்கள் முன்மொழிவை சமர்ப்பித்தோம். எனினும், முழுமையாக ஆய்வை மேற்கொள்ளும்படி ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் நகர்ப்புறங்களில் 1200 பேர் கிராமப்புறங்களில் 2800 பேர் என 4000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டோம். இதில், இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயாலும் 13 கோடியே 60 லட்சம் பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையாலும் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது," என்று கூறினார்.'
 
நீரிழிவுக்கு முந்தைய நிலை கிராமப்புறங்களில் அதிகமாக இருப்பது ஆபத்தா?
"ப்ரீ-டயாபெட்டிஸ் பாதிப்பைப் பொறுத்தவரை கிராமப்புறங்களிலும் நகர்ப்புற மக்கள்தொகைக்குச் சமமாக இருக்கிறது," எனக் கூறுகிறார் மருத்துவர் அஞ்சனா.
 
"ப்ரீ-டயாபட்டிஸ் உள்ள மக்களில் 60 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகளாக மாற வாய்ப்பு உண்டு. இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில்தான் உள்ளனர். அப்படியிருக்கும்போது, கிராமப்புறங்களில் ப்ரீ-டயாபட்டிஸில் இருந்து டயாபட்டிஸுக்கு மாறுவோரின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்தாலும், பல கோடி பேர் டயாபட்டிஸ் பாதிக்கப்பட்டவர்களாக மாற வாய்ப்பு உள்ளது.
 
எனவே, கிராமப்புறங்களில் இதைத் தடுப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த எண்ணிக்கை உயராமல் தடுக்க முடியும்," என்கிறார் மருத்துவர் அஞ்சனா.
 
உணவு பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது மூலம் இதைச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
"நமது உணவுப்பழகத்தில் 11 சதவீதம்தான் புரோட்டின் சாப்பிடுகிறோம். இதை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். 3 சதவீதமாக உள்ள ஃபைபரை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். உடலுக்கு உழைப்பு கொடுக்க வேண்டும்.
 
பொதுவாகவே தொற்றா நோய்கள் 50 வயதுக்கு மேல்தான் வரும். ஆனால், நமக்கு 20 வயதிலேயே வருகிறது. ஆரோக்கியமாக இருக்க வேண்டிய வயதில் நோய் வந்தால் அது எப்படி சரியாக இருக்கும். எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," என அஞ்சனா கூறுகிறார்.
 
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீரிழிவு பாதித்தோர் எண்ணிக்கையைவிட நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக அஞ்சனா தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டில் "நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அளவு 14.4 சதவீதமாக உள்ளது. நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களின் அளவு 10 சதவீதமாக உள்ளது. சுகாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக இருப்பதாலும் மக்களிடம் விழிப்புணர்வு இருப்பதாலும் பிரீ டயாபட்டிஸ் குறைவாக உள்ளது. நம்முடைய மாநிலம் நிலைத்தன்மையை அடைந்து வருகிறது," என்கிறார் மருத்துவர் அஞ்சனா.
 
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் நன்கு பயனளிக்கிறது
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு, தனியார் இரு தரப்பிலுமே மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. அதனால், நோய்களை முன்னரே கண்டறிந்து சிகிச்சையளிப்பது சிறப்பாக உள்ளது," என்கிறார் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மு.அகிலன்.
 
இந்த ஆய்வறிக்கை தொடர்பாகவும் தமிழ்நாட்டில் நோய்களைக் கண்டறிய எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்தும் மருத்துவர் அகிலனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழ்நாடு முன்னெடுத்து வருகிறது.
 
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு சப்-சென்டருக்கு ஓர் ஊழியரை நியமித்து அவர்களுக்கு குளூக்கோமீட்டர், பிபி பரிசோதனை செய்யும் கருவி போன்றவற்றை வழங்குகிறோம். இதைக் கண்காணிப்பதற்கு ஒரு செவிலியர் என ஒரு குழு உருவாகிவிடுகிறது. அவர்கள் தினமும்18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20 முதல் 50 பேர் வரை பரிசோதனை செய்கின்றனர்," எனக் கூறுகிறார்.
 
அப்படி பரிசோதனை மேற்கொள்ளும்போது ஒருவருக்கு ப்ரீ-டயாபெட்டிஸ் இருந்தால், "ஆரம்ப சுகாதார மையத்திற்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. அவ்வாறு வருவோரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்வது என்பன போன்ற பரிந்துரைகளை வழங்குகிறார்கள்."
 
அந்தப் பரிந்துரைகளைச் சரியாகப் பின்பற்றினால், நீரிழிவு நோயாளி ஆகாமல் தப்பித்துவிடலாம் எனக் கூறுகிறார் மருத்துவர் அகிலன்.
 
ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவை எளிய மக்களைச் சென்றடைவதாகக் கூறும் அவர், "ப்ரீ-டயாபெட்டீஸ் என்று மட்டும் இல்லாமல், உயர் ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய் போன்றவை இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்கின்றனர். இதனால் நோய்களை முன்னரே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கிறது," என்கிறார்.