1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (14:48 IST)

பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு 18% ஜிஎஸ்டி - கார் வாங்குபவர்களை பாதிக்குமா?

இந்தியாவில், வணிக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கான (மின்சார கார்கள் உட்பட) ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் என்பதிலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்தில் வரி உயர்வு குறித்த இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

வரும் 2028-ஆம் ஆண்டில், இந்தியாவின் பழைய கார் சந்தையின் மொத்த மதிப்பு 73 பில்லியன் டாலராக உயரும் (இந்திய மதிப்பில் ரூ.6,21,474.41 கோடி) என ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி 'தி எகானாமிக் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுவே 2023-ஆம் ஆண்டில் இந்தச் சந்தையின் மொத்த மதிப்பு 2,76,179.83 கோடிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

 

பழைய மற்றும் பயன்படுத்திய கார்கள் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்?

 

முந்தைய வரி விகிதங்கள்

 

பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான ஜிஎஸ்டி வரியைப் பொருத்தவரை, பெட்ரோல் கார்களில், 1200 சிசி வரை என்ஜின் திறன் மற்றும் 4000 மிமீ வரை நீளமுடைய வாகனங்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த அளவை தாண்டும் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி என்று இருந்தது.

 

டீசல் கார்களைப் பொருத்தவரை 1500 சிசி வரையிலான என்ஜின் திறன் மற்றும் 4000 மிமீ வரை நீளமுடைய வாகனங்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த அளவை தாண்டும் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி என்று இருந்தது.

 

மின்சார கார்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து வகையான பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனை வரி விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், இந்த வரி உயர்வு என்பது பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு மட்டுமே என்றும், தனிநபர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வரி விகிதம் வாகனத்தை விற்பனை (Supplier) செய்பவரின் மார்ஜின் (Margin) தொகைக்கு மட்டுமே பொருந்தும். அதாவது ஒரு காரை வாங்கும் போது இருந்த விலைக்கும் விற்கும் போது இருக்கும் விலைக்கும் உள்ள வித்தியாச தொகைக்கு மட்டுமே வரி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பழைய கார்களின் முக்கியத்துவம்
 

"பழைய கார்கள் குறித்த விஷயத்தில் வரிவிதிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும்" என பழைய மற்றும் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் 'கார்ஸ் 24' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் சோப்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

"பழைய கார்கள் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளன. 'கார் உரிமையாளர்' எனும் கனவை அடைவதற்கான எளிய வழியாகவும் பழைய கார்கள் உள்ள நிலையில், சமீபத்திய ஜிஎஸ்டி உயர்வு போன்ற கொள்கைகள் இத்துறையின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

பழைய கார்களை, பாதுகாப்பானதாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மற்றும் நம்பகமான தேர்வாக மாற்றுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று விக்ரம் வலியுறுத்தியுள்ளார்.

 

மக்களின் பயணங்கள் எளிதில் அணுகக் கூடியதாகவும் மலிவானதாகவும் இருப்பதை உறுதி செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், "இதில் பழைய கார்களின் பங்கு முக்கியமானது. ஏனெனில் அவை தனிநபர்கள் மட்டுமல்லாது, பல்வேறு சிறுதொழில்களின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

'தி எகானாமிக் டைம்ஸ்' நாளிதழின் செய்தியின் படி, 2022ஆம் நிதியாண்டில், இந்தியாவில் மட்டும் 35 லட்சத்திற்கும் அதிகமான பழைய கார்கள் விற்கப்பட்டுள்ளன. அதே ஆண்டில் உலகளவில் 4 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பழைய கார்கள் விற்கப்பட்டுள்ளன.

 

பொதுமக்களுக்கு பாதிப்பில்லையா?
 

"இதனால் பொதுமக்களுக்கு தற்காலிகமாக பாதிப்பில்லை, வணிக நிறுவனங்களுக்குதான் அதிக பாதிப்பு" என்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபு. இவர் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் ஒரு வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

 

"கொரோனாவுக்குப் பிறகு தான் நடுத்தர குடும்பத்தினர் எங்களை நோக்கி வரத் தொடங்கினர். ரூ.10 முதல் ரூ.15 லட்சம் புதிய கார் வாங்குவதற்கு பதிலாக, 3 முதல் 4 வருடங்கள் பயன்படுத்திய ஒரு கார் ரூ.5 லட்சத்திற்கு கிடைக்கிறது எனும்போது, பலரும் இதையே விரும்பினார்கள். இதனால் இரு தரப்பிற்கும் லாபம் கிடைத்தது." என்று அவர் கூறுகிறார்.

 

"நிறுவனங்கள் இந்த வரி உயர்வை சமாளிக்க ஒருகட்டத்திற்கு பிறகு, பயன்படுத்திய கார்களின் விலையை உயர்த்ததான் செய்வார்கள். அப்போது இது மக்களையும் பாதிக்கும்" என்கிறார் பிரபு.

 

நிறுவனங்களுக்கு வரி அதிகரிப்பு ஏன்?
 

இதுதொடர்பாக பொருளாதார நிபுணர் கௌரி ராமச்சந்திரன் கூறுகையில், "தனிநபர்கள் கார்களை விற்கும்போது பெயரை மட்டும் மாற்றிக்கொள்வார்கள். ஆனால், வாகனத்தின் எண் மாறாது. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கிலான கார்களுக்குப் பெயர்கள் மாற்றப்படும். ஒரு குடும்பத்திற்குள் கூட கார்களுக்குப் பெயர்கள் மாற்றப்படும். அதனால் அவற்றுக்கு ஜி.எஸ்.டி விதிக்க முடியாது. அதனால்தான் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி விதித்துள்ளனர், ஏனெனில் அவற்றுக்கு வியாபார நோக்கம் இருக்கும். தனிப்பட்ட நபர்களுக்கு வியாபார நோக்கம் இல்லை," என்றார்.

 

இந்த வியாபார நோக்கத்தால்தான், தனிப்பட்ட நபர்களுக்கு அல்லாமல் நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

 

"எனினும், இது சாமானியர்களுக்கு, குறிப்பாக பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நிறுவனங்கள் அந்த கார்களை ஜி.எஸ்.டியுடன் விற்கும்போது அவர்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்," என கூறுகிறார் கௌரி.

 

பழைய கார்களுக்கு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து விற்கும்போது அந்த கார்களுக்கான தேவை குறைந்து, நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

 

இதுதொடர்பாக தொழில் ஆலோசகர் ஷ்யாம் சேகர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "உதாரணமாக, நான் ஒரு நிறுவனம் நடத்திவருகிறேன் என வைத்துக்கொள்வோம். நான் ஒரு காரை வாங்கி அதை என் நிறுவனத்திற்கு விற்கும்போது கூட முன்பு வரி இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் முன்னர் இதற்கென மதிப்பு கூட்டு வரி (VAT) இருந்தது. முன்பு 12.5% கட்டணம் இருந்தது," என்கிறார்.

 

ஆனால், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபோது, பழைய கார்களை விற்கும் தொழிலை தவறுதலாக அரசு கவனித்திருக்காமல் இருந்திருக்கலாம் என்கிறார் ஷ்யாம்.

 

"இப்போது பழைய வாகனங்களை வாங்கி, விற்பது மிகப்பெரிய, முறைப்படுத்தப்பட்ட தொழிலாக வளர்ந்திருக்கும் சமயத்தில் அதற்கு வரி விதிக்க வேண்டும் என அரசு நினைப்பது இயல்பானதுதான். அது, அரசுக்கான வருவாய் ஆதாரமாக உள்ளது. இத்தொழில்களுக்கு ஒரே இடத்தில் வரி விதிப்பது எளிதானது என, அரசாங்கம் கருதுகின்றது. மத்திய அரசு, மாநிலங்கள் என அனைத்துத் தரப்புக்கும் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக, வருவாய் ஆதாரம் தேவைப்படுகின்றது," என கூறுகிறார் அவர்.

 

இந்த வரி அதிகம் தான் எனக்கூறும் அவர், பல்வேறு தரப்புகளின் கருத்தைக் கேட்டு பின்னர் அந்த வரியை அரசு குறைக்கக்கூடும் என்று கருதுகிறார்

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.