வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (12:01 IST)

கேரளாவுக்கு சென்ற தினகரன் - பின்னணி என்ன?

ஒரு முக்கிய அரசியல் புள்ளியை சந்திப்பதற்காக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கேரளாவிற்கு சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன் பின் அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் 32 பேர் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். 
 
ஏற்கனவே இரண்டு அணிகளாக உலா வரும் அதிமுகவில், தினகரன் புதிதாக மற்றொரு அணியை உருவாக்க முயன்ற விவகாரம் மத்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், இதுகுறித்து அவரை மத்திய அரசு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று முன் தினம் இரவு அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் டெல்லிக்கு செல்லவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
அதாவது, தொடர்ந்து தனக்கு நெருக்கடி கொடுத்து வரும் மத்திய அரசை சரிகட்ட முடிவெடுத்த தினகரன், மத்திய அரசுக்கும், மன்னார்குடி வட்டாரத்திற்கும் இடையே நெருக்கமாகவும், பாலமாகவும் உள்ள கேரள அரசியலில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரை சந்திக்க அவர் கேரளா சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
தன் மீது மத்திய அரசு அடுக்காக எடுத்து வரும் நடவடிக்கைகளை குறித்து அவரிடம் தினகரன் எடுத்துரைத்து, எப்படியாவது அதை தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் எனத்தெரிகிறது.