வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (17:41 IST)

செந்தில் பாலாஜி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் மோதல் : எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு ஆபத்து

செந்தில் பாலாஜியை மறைமுகமாக பழிவாங்க துடிக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செயலால் 34 எம்.எல்.ஏ க்களும் போர்க்கொடி ஏந்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
கடந்த 10 ஆண்டுகளாக கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாகவும், 4 ½ ஆண்டுகள் தமிழக அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஆன்மீகம், கல்வி, விளையாட்டு என்று அனைத்து தரப்பினரும் மிகவும் கவரப்பட்டவர். மாணவ, மாணவிகளின் விளையாட்டிற்காகவும், கல்விக்காகவும் ஆதரவு மற்றும் உதவிகள் செய்தவர்
 
தற்போது அவரது பதவி பறிப்பிற்கு பின்பு அவரை வெறுத்தவர்களும் தற்போது நேசிக்கின்றார்களாம், காரணம் தற்போதைய கரூர் மாவட்ட செயலாளரும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ மட்டுமில்லாமல் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செய்கையால் தான். இப்படி பல்வேறு காரணங்கள் தாண்டியும், செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கரை மதிக்க வில்லை என்ற நேரம் மற்றும் காலம் போய், விஜயபாஸ்கர் தலைநிமிர்ந்தவுடன் செந்தில் பாலாஜியை சுத்தமாக ஒதுக்கி விட்டார். 
 
கட்சி என்ன சொல்கின்றது நான் சொல்கின்றேன் கேள் என்றும், டாஸ்மாக் கடை முதல் சுங்கவரி என்று எல்லாவற்றிலும், உனக்கு போஸ்டிங் கட்சி பதவி காண்ட்ராக்ட் வேண்டுமா? செந்தில் பாலாஜியை விட்டு என்னிடம் வா? பிழைத்துக் கொள்வாய் என்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை மிரட்டி ஒரு சில பேரை படிய வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். தற்போது தனக்கு குறுகிய அதாவது 441 வாக்குகள் மட்டுமே கொடுத்த கரூர் தொகுதிக்கு நான் ஏன் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டுமென்று கருதிய விஜயபாஸ்கர் அடுத்த தொகுதியான கிருஷ்ணராயபுரம் தொகுதியான சணப்பிரட்டி பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்க திட்டம் தீட்டியதோடு தற்போது மருத்துவக்கல்லூரி என்றால் உடனே வேறு சப்ஜெக்டை கையாண்டு அடுத்தவரை வாயடைக்க செய்து வருகின்றார். 
 
ஆனால் இவருடைய செயலுக்கு எந்த கண்டனமும் தெரிவிக்காத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் எம்.எல்.ஏ என்ற ஒரு ஒட்டு உள்ளது என்ற அடிப்படையில் தான் அவரிடமும் கவனம் கொள்கின்றார். இந்நிலையில் இந்த அரசியல் செய்யும் இவர், செந்தில் பாலாஜியை பழிவாங்குவதாக கூறி அந்த அரவக்குறிச்சி தொகுதியில் மேல்நிலைப் படிக்கும் மாணவ, மாணவிகள் என்று 16 மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒராண்டு ஆகியும் விலையில்லா மிதிவண்டி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
 
இந்நிலையில் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய அளவில் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிலையில் ஆளுகின்ற அ.தி.மு.க கட்சியின் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் தொகுதியில் மட்டும் 2016-17 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான மிதிவண்டிகள் வழங்காததற்கு அரவக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து போராட்டக்களத்தில் இறங்கியுள்ளது.


 

 
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 2016-17 கல்வியாண்டில் அந்த தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிலையில் இன்று மீண்டும் அதே கல்வியாண்டிற்கு இன்று நான்காவது சுற்றாக கரூர், குளித்தலை ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இன்று 13 பள்ளியில் பயிலும் 937 மாணவர்கள் மற்றும் 1085 மாணவியர்களுக்கு ஆக மொத்தம் 2022 பயனாளிகளுக்கு ரூ 63 லட்சத்து 69 ஆயிரத்து 300 ஆக மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. 
 
மேலும் இதன் மூலம் மொத்தம் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 285 பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 97 லட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பீட்டில் மிதிவண்டிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் பட்சமாக அவர் தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் ஒரு சைக்கிள் கூட வழங்கப்படவில்லை. 
 
இதனால், கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி பொருளாதார இயக்கம் விழிப்புணர்வு இயக்கத்தின் ரவிநாத் மற்றும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் சுரேந்தர் ஆகியோர் இதை கையெழுத்து இயக்கமாகவும், கோட்டை முதல் கவன ஈர்ப்பு போராட்டமாகவும், எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவனின் உத்திரவின் கீழ் செய்வோம் என்றும் தெரிவித்தனர். மேலும் ஒரே ஒரு எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தானே என்று உதாசினப்படுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, தற்போது அவருடன் டி.டி.வி தினகரனுடனாகிய 34 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு உள்ள நிலையில் நாளை மறுநாள் கரூர் மருத்துவக்கல்லூரி விவகாரத்துடன், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு சைக்கிள் (அதுவும் அம்மாவின் வழியிலான ஆட்சியில்) மாணவ, மாணவிகளுக்கு கொடுக்காதது ஏதாவது விஸ்வரூபமெடுக்குமா? என்று பார்க்கத்தான் வேண்டுமென்கின்றனர் நடுநிலையாளர்கள்.
 
இதே அரவக்குறிச்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட பா.ம.க., தி.மு.க கூட இந்த பிரச்சினையை கையில் எடுக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, உரிய நேரத்தில் களத்தில் இறங்கியது அந்த கட்சிக்கு கிடைத்த வரவேற்பு என்றும் பொதுநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
கரூர் செய்தியாளர் - சி.ஆனந்தகுமார்