தீபாவிற்கு ஆதரவு சேர்க்கும் சசிகலா புஷ்பா? - கார்டன் கலக்கம்


Murugan| Last Modified புதன், 11 ஜனவரி 2017 (10:25 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக, சசிகலா தலைமையை எதிர்க்கும் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரின் நீண்ட நாள் தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழகத்தின் முதல்வர் பதவியிலும் அமர்வார் எனத் தெரிகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை எனத் தெரிகிறது.
 
அதில் பலர் தீபாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தீபா பெயரில் பேரவைகள் உருவாக்கப்பட்டு அதில் ஆள் சேர்க்கும் பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீபா பேனர், போஸ்டர் என களை கட்டுகிறது. சில இடங்களில் தீபா பெயரில் புதிய கட்சியையும் அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று அவரை அரசியலுக்கு வரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அவரும் விரைவில் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். 
 
இந்நிலையில், ஜெ. உயிரோடு இருக்கும் போதே, சசிகலா மீது பல குற்றங்களை கூறியவர் சசிகலா புஷ்பா. ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் சசிகலாவிற்கு எதிராக பகீரங்கமாக குரல் கொடுத்து வருகிறார். ஜெ.வின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் புகார் மனு அளித்து பரபரப்பை கிளப்பினார். இவரின் செயல்பாடுகள் சசிகலா தரப்பிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
சசிகலாவின் தலைமையை விரும்பாத பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா புஷ்பா தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முக்கியமாக, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் தீபாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. அவர்களை ஒன்றிணைத்து, தீபா தலைமையில் சசிகலா தரப்பிற்கு அவர் நெருக்கடி கொடுப்பார் எனத் தெரிகிறது. 
 
இது தெரிந்து அதிர்ச்சியடைந்த சசிகலா தரப்பு, தனக்கு எதிராக செயல்படுபவர்களின் பெயர் பட்டியலை தயாரித்துள்ளது. முதல் கட்டமாக அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தப்படும். அடுத்து அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :