அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ்? - தம்பிதுரை பரபரப்பு பேட்டி
கட்சிக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்பது குறித்து, துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய பின், ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவாக 11 எம்.பி மற்றும் 10 எம்.எல்.ஏக்கள் குரல் கொடுத்தனர்(அவரோடு சேர்த்து 11). மேலும், அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோரும் ஓ.பி.எஸ் பக்கம் வந்தனர்.
இதில் ஓ.பி.எஸ், மதுசூதனன் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா நீக்கினார். ஆனால், என்னை நீக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறிய மதுசூதனன், சசிகலாவை நான் ஏற்கனவே நீக்கிவிட்டதாக கூறினார். மேலும், சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விட்டதாக ஓ.பி.எஸ் அணி அறிவித்தது.
இதனால், அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது பற்றி மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை “ தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது நிலையான ஆட்சி அமைந்துள்ளது. வரும் நான்கரை ஆண்டுகளில் ஜெ.வின் கனவுகளை இந்த அரசு நிறைவேற்றும். தமிழகம் வளர்ச்சி அடையும். அதிமுகவை உடைக்கும் வேலையில் ஓ.பி.எஸ் இறங்கினார். ஆனால் அவர் பக்கம் 10 எம்.எல்.ஏக்கள் மட்டுமே நின்றனர். குடியரசு ஆட்சி கொண்டு வர வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அது நடக்கவில்லை.
எனவே, ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி, சசிகலாதான் முடிவு செய்ய வேண்டும். அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம்” என அவர் கூறினார்.