1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (19:49 IST)

3வது இடைத்தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகர் தொகுதி

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அவர் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


 

 
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார். அதன்பின், சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி  அவரின் எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவியை பறிகொடுத்தார். அதனால், ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
அதன்பின், அவர் பெங்களூர் உயர் நீதிமன்ற நிதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பில் 2015ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் மே 23ம் தேதி அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
 
ஆனால், முதல்வராக நீடிக்க ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏவாக நின்று வெற்றி பெற வேண்டும் என்பதால், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பேட்டியிட வசதியாக, அந்த தொகுயில் ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜூன் 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று தன் முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
 
அதன்பின், 2016 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியிலேயே போட்டியிட்டார். அதிலும் அவர் வெற்றியைடைந்து முதல்வராக பதவியேற்றார்.
 
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை எடுத்த நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
 
இதனால் ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தில் சட்டப்படி இன்னும் 6 மாதங்கள், அதாவது அடுத்த வருடம் மே மாதத்திற்குள் அந்த தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
 
எனவே, இந்த ஒன்றரை வருடங்களில் ஆர்.கே.நகர் தொகுதி 3 தேர்தலை சந்திக்கிறது.