வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (17:16 IST)

ஜெ. மர்ம மரணம் ; நடந்ததை சொல்வேன் ; சி.பி.ஐ என்னை விசாரிக்கட்டும் - ஓ.பி.எஸ் அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த தாரளமாக சி.பி.ஐ என்னை விசாரிக்கட்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் ஓ.பி.எஸ் அணி எழுப்பி வருகிறது. அவரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 33 இடங்களில் நேற்று காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
 
இதில் ஓ.பி.எஸ் அணி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போரட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதில், பொன்னையன், மதுசூதனன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 
அந்த போராட்டத்தின் போது பேசிய ஓ.பி.எஸ் “ ஜெ.வின் மர்ம மரணம் தொடர்பாக ஒன்றைகோடி தொண்டர்கள் அனைவர் மனதிலும் சந்தேகம் இருக்கிறது. நீதி விசாரனை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும். அதற்காகத்தான் இந்த போராட்டம் நடத்துகிறோம். ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரை சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்ல சசிகலாவிடம் மன்றாடினேன். அவர் காது கொடுத்து கூட கேட்கவில்லை.
 
ஜெ. மரணமடைந்த அன்று எனக்கு மாலை 6.30 மணிக்கு தகவல் சொன்னார்கள். நான் உடனே மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் கூறினார்கள். அதன்பின் இரவு 11.30 அவர் இறந்துவிட்டார் எனக் கூறினார்கள்.  ஆனால், மக்கள் நலத்துறைச் செயாலாலர் ராதாகிருஷ்ணன், என்னிடம் எல்லா நிலவரத்தையும் தெரிவித்ததாக கூறுகிறார். இப்படி கூறியதை அவர் வாபஸ் பெறாவிட்டால் அவர் மீது வழக்கு தொடர்வேன்.
 
சி.பி.ஐ முதலில் என்னைத்தான் விசாரிப்பார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். நான்தான் விசாரணை கேட்டேன். தாராளமாக சிபிஐ என்னை விசாரிக்கட்டும். அப்போது எல்லா உண்மைகளையும் செல்வேன். நாட்டு மக்களுக்கும் உண்மை தெரிய வரட்டும். உண்மையில் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி” எனக் கூறினார்.