வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (10:58 IST)

ஜெ.பிறந்த நாள் விழா - முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் தீபா, ஓ.பி.எஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அரசியல் ரீதியாக ஓ.பி.எஸ் மற்றும் தீபா ஆகியோர் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.


 

 
சசிகலா தரப்பிற்கு எதிராக ஓ.பி.எஸ் மற்றும் தீபா என இரண்டு அணிகள் இருப்பது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தீபா சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின், தீபா தனியாக செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் ஜெ.வின் 69வது பிறந்த நாள் இன்று அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. ஆர்.கே.நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஓ.பி.எஸ் அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு, ஓ.பி.எஸ், தமிழக அரசியலை மாற்றியமைக்கக் கூடிய அறிவிப்புகளை வெளியிடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் ஆவடி எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அதேபோல், தனது அரசியல் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தீபா ஏற்கனவே அறிவித்திருந்தார். 
 
ஓ.பி.எஸ் மற்றும் தீபா ஆகியோர் அரசியல் ரீதியாக முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிடவுள்ள விவகாரம் அவர்களது ஆதரவாளர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.