மத்திய அரசின் செயல்பாடுகளை திமுக பொருளாலரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் “அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலையை” மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசு உருவாக்கி ஏழை, எளிய, நடுத்தர மக்களை தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கி வருவது கண்டனத்திற்குரியது.
“500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது” என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தவுடன், அரசு நிர்வாகம் குறித்து அறிந்த அனைவருமே இந்த கொள்கையை அமல்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் செய்திருக்கின்றன என்று பிரதமர் உறுதி செய்திருப்பார் என்றே நம்பினார்கள். அந்த அடிப்படையில் கறுப்புப் பண ஒழிப்பு குறித்து அனைவருமே வரவேற்பு தெரிவித்தார்கள்.
குறிப்பாக நான் கூட சிறு வணிகர்கள், சாதாரணக் குடிமக்கள் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்று கூறி தமிழக எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை வரவேற்றேன். ஆனால் இந்த அறிவிப்பிற்குப் பிறகு நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது “எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாமலேயே” இப்படியொரு கொள்கை முடிவை மத்திய அரசு அமல்படுத்திக் கொண்டிருக்கிறது என்று புலனாகிறது.
வங்கிகளில் தங்கள் கணக்கில் உள்ள பணத்தைக் கூட ஏ.டி.எம்.கள் மூலம் மக்களால் சுதந்திரமாக எடுக்க முடியவில்லை என்பது வேதனைக்குறியதாக அமைந்திருக்கிறது.
வங்கிகளில் பணம் மாற்றுவதற்கு அடையாள அட்டை இருந்தாலே போதும் 4000 ரூபாய் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று முதலில் அறிவித்தார்கள். அதே போல் ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதை நம்பி ஏ.டி.எம்.களுக்கு போனவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. அதனால் நாட்டில் பல பகுதிகளில் ஏ.டி.எம்.கள் கூட சூறையாடப்பட்டன. ஒரு சிலருக்கு மட்டுமே ஏ.டி.எம்.களில் பணம் கிடைத்ததால் அதிகாலையிலேயே வங்கிக் கிளைகள் முன்போ, ஏ.டி.எம்.கள் முன்போ நீண்ட க்யூவில் மக்கள் நிற்கத் தொடங்கினார்கள்.
இதன் விளைவாக பல லட்சக் கணக்கான மக்களின் தினசரி உழைப்பு வீணாகிப் போனது. கூலி வேலைக்குப் போவோர் கூட தங்களின் வேலையை விட்டு விட்டு வங்கிகள் முன்பு நின்றார்கள். இன்றும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றால் அடுத்த வேளை அரிசி, பால் வாங்க என்ன செய்வது என்ற கவலையும், பீதியுமே மக்களை வங்கிகள் முன்பு குவிய வைத்தது.
இந்நிலையில் தினமும் 10 ஆயிரம் ரூபாய் எடுக்கும் வசதி ரத்து செய்யப்பட்டு விட்டது. பணம் எடுப்பதிலும், மாற்றுவதிலும் உள்ள குழப்பங்கள் ஓரிரு நாளில் சீராகும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் மத்திய அரசின் சார்பில் இன்னொரு புது நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் அளித்த பேட்டியில், “வங்கிக்கு பணம் எடுக்க வருவோர் கையில் இனி அழியாத மை வைக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.
“125 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்று பிரகடனம் செய்து ஆட்சி செய்யும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இப்படி சொந்த மக்களையே நம்பாமல் அவர்கள் விரலில் மை வைக்கும் செயலில் ஈடுபடுவது மிகப்பெரிய கொடுமை. மத்திய அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை வேதனைக்குரியது மட்டுமல்ல- ஜனநாய நாட்டில் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. “வெளிப்படையான நிர்வாகம்.
மக்களுக்கான அரசாங்கம்” என்ற முழக்கத்தை 2014 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் முன் வைத்து ஆட்சிக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு ஏழை எளிய நடுத்தர மக்களின் விரலில் மை வைக்க முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இந்த செயல் ஜனநாயக பாதையிலிருந்து நாடு வேறு எங்கோ திசைமாறிச் செல்கிறதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே சொந்த நாட்டு மக்களையே சந்தேகிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். வங்கிக்கு பணம் எடுக்க வருவோருக்கு “அழியாத மை வைப்போம்” என்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்களின் இன்னல்களைப் போக்கும் விதத்தில் வங்கிகளில் பண விநியோக முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்...