Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (16:48 IST)
தமிழக முதல்வராக சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் - விஜயபாஸ்கர் கோரிக்கை
கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் இளைஞரணி ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, அ.தி.மு.க வின் அடுத்த பொதுச்செயலாளர் சின்னம்மா என்கின்ற சசிகலா தான் வரவேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். அவரது மறைவிற்கு பிறகு அம்மாவின் கொள்கைகளையும், கட்சித்தொண்டர்களையும் வழி நடத்துவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கனவை நனவாக்கிடவும், ஒன்றரை கோடி தொண்டர்களையும் கட்சியின் வழியில் செயல்படுத்த சின்னம்மா சசிகலா அவர்களை கட்சியின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் வழி நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.