வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: சனி, 8 ஜூலை 2017 (06:02 IST)

இந்திராகாந்தி செய்தது தவறு: ப.சிதம்பரம் பேச்சால் சோனியா அதிருப்தியா?

காங்கிரஸ் கட்சியினர்களுக்கு இந்திராகாந்தியின் தைரியமான முடிவுகள் தான் வழிகாட்டியாக இருந்து வருகிறது.அவர் மீது காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் பெரும் மதிப்பு வைத்திருக்கும் நிலையில், 'இந்திராகாந்தி எமர்ஜென்ஸியை அறிவித்தது தவறு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விழா ஒன்றில் பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக சோனியா குடும்பத்தினர் இதனால் அதிருப்தி அடைந்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.



 
 
சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளர் சாகரிக கோஸ் என்பவர் எழுதிய 'இந்திராகாந்தி - இந்தியாவின் வலிமைமிக்க பிரதமர்' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டுபேசியதாவது:
 
இந்திரா காந்தி காலக் கட்டத்தில் ஜே.பி.நாரயணனின் இயக்கத்தால் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சம் இருந்தது உண்மை தான். ஆனால், இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸி முடிவு தவறானது. இருப்பினும் இந்திரா காந்தி தைரியமாக தேர்தலை எதிர்கொண்டார்.
 
தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போது அரசியல் தலைவர்கள் மிரட்டப்படுகிறாரகள். ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன.  புலனாய்வு அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுகிறது. திட்டமிட்டு கும்பலாக பொதுமக்களை கொலை செய்கின்றனர். அவர்கள் பிரதமர் உள்பட ஒருவருக்கும் பயப்படுவதில்லை. பசுவின் பெயரால் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பிரதமர் பேசும் அதே நேரத்தில் ஜார்கண்டில் ஒருவர் கொல்லப்படுகிறார். இந்தச் சம்பவங்கள் என்னை அச்சமடையச் செய்கின்றன. தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது' என்றார்.