இப்படித்தான் பேச வேண்டும் - ஓ.பி.எஸ் அணி பேச்சாளர்களுகு அறிவுரை
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் எப்படி பேச வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 12ம் தேதி, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், தினகரன், தீபா, திமுக வேட்பாளர் மருது கணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினகரனுக்கு ஆதரவாக சி.ஆர். சரஸ்வதி, குண்டு கல்யாணம் உள்ளிட்ட சிலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், மதுசூதனனுக்கு ஆதரவாக, நடிகர்கள் ராமராஜன், மனோபாலா மற்றும் நிர்மலா பெரியசாமி, முதல் மரியாதை தீபன் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நட்சத்திர பேச்சாளர், பிரச்சாரத்தில் எப்படி பேச வேண்டும், எந்த விஷயங்கள் குறித்தெல்லாம் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
அதில், அதிமுகவை ஆக்கிரமித்துள்ள குடும்ப ஆட்சி, திமுகவில் உள்ள குடும்ப ஆட்சி, ஜெயலிதாவின் சாதனைகள், ஓ.பி.எஸ்-ஸின் தலைமைப் பண்பு ஆகியவற்றை பேச வேண்டும். மேலும், மதுசூதனன் இந்த மண்ணின் மைந்தர் என்பதை விளக்கமாக கூற வேண்டும். அதேபோல், ஜெ.வின் மர்ம மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது உள்ள சந்தேகங்கள், ஓ.பி.எஸ் முதல்வரனால் ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.