வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 7 டிசம்பர் 2016 (11:21 IST)

சசிகலா புஷ்பா சந்தேகப்பட்டது போல் ஜெ.வை சுற்றி சதிகார கும்பலா?

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி சதிகாரக் கும்பல் இருப்பதாக கூறியதுபோல் நிலைமை இருப்பதாக அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.


 

கடந்த அக்டோபர் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2011ம் ஆண்டு 16 பேரை ஜெயலலிதா கட்சியில் இருந்து வெளியேற்றினார். சசிகலா நடராஜன் உள்பட. எதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜெயலலிதா அதற்கு கூறிய காரணம், என் ஆட்சியை கவிழ்ப்பதற்காக எனக்கு பின்னால் இருந்து துரோகம் செய்தார்கள். சதி செய்து ஆட்சியை கலைக்கப் பார்த்தார்கள் என்று துரோக குற்றச்சாட்டு சசிகலா நடராஜன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தி, சிலரை சிறையில் கூட அடைத்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மீண்டும் அப்படியேதேனும் சதி செய்யப்பட்டதா என்று தொண்டர்கள் மத்தியிலும், என் மத்தியிலும் எழுந்திருக்கிறது. ஏனென்றால் ஜெயலலிதா 2011ல் அவரை கட்சியில் இருந்து நீக்கிப்பின்னர் மீண்டும் அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து என்ன கூறி வந்தார்கள்.

நான் அக்காவுக்கு என்றைக்குமே உழைக்கக் கூடிய சேவகியாகத்தான் இருப்பேன். ஒரு கவுன்சிலர் பதவிக் கூட நான் வாங்க மாட்டேன். அரசியலில் எந்த ஒரு கட்சிப் பதவியும் எனக்கு வேண்டாம் என்று சொன்ன சசிகலா நடராஜன், ஏன் தஞ்சாவூரில் நிற்கலாமே என்று வேறொவரை சொல்ல வைத்து விளம்பரம் செய்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, சசிகலா உறவினர்கள் தவிர யாரையும் பார்ப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் வரை யாரையும் அனுமதிக்கவில்லை.

இவ்வளவு ஏன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் தேசிய தலைவர்களைக் கூட பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. அப்பொழுதே, அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

இத்தனைக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, ஒரு புகைப்படமோ, ஆடியோ பதிவைக்கூட வெளியிடவில்லை. இதுவும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று திங்கள்கிழமை மரணமடைந்த ஜெயலலிதா ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டது. அங்கு ஜெயலலிதவிற்கு அருகில் சசிகலா, இளவரசி, விவேக், மற்றும் திவாகரன் ஆகியோரே சூழ்ந்துள்ளனர். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் கூட ஜெயலலிதாவின் காலடிக்கு கீழேயே வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சகிகலா புஷ்பா கூறிய, சதிகாரக் கும்பல் இருப்பதாக கூறியது ஜெயலலிதாவைச் சுற்றி உண்மைதானோ என்று தொண்டர்கள் கருதுகின்றனர்.