1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2016 (11:55 IST)

பிரகாசித்த ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை

ஆணாதிக்கம் மிக்க ஒரு சமூகத்தில் தனித்த பெண்மணியாக, தன்னை தனி வாழ்விலும், பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் நிலைநிறுத்திக் கொண்டவர் மறைந்த நமது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.


 

1948ஆம் ஆண்டு 24 பிப்ரவரி ஆம் நாள் மைசூர் சமஸ்தானத்தில், ஜெயராம் - வேதவல்லி ஆகியோரது 2ஆவது குழந்தையாக பிறந்தவர் ஜெயலலிதா. தனது 2ஆவது வயதிலேயே தந்தையை இழந்து போராட்ட வாழ்க்கையை தொடங்கியவர்.

ஜெயலலிதாவின் தாயார் வேதவல்லி அவர்கள், சினிமா வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு தனது பெயரை சந்தியா என்று மாற்றிக்கொண்டார்.

ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தப் பின், சென்னைக்கு வந்தார். பிறகு சர்ச் பார்க் ப்ரசெண்டேஷன் கான்வென்ட்டில் மெட்ரிக் படிப்பை முடித்தார். இங்குதான், பள்ளி ஆசிரியை கேத்தரின் சைமன் அவர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றார். தமது வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்தரின் என ஜெயலலிதா கூறியிருந்தார்.

பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ்’ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த ஜெயலலிதா அவர்களுக்கு, சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், குடும்பச் சூல்நிலை திரையுலகில் நுழைய வேண்டியதாயிற்று.

சினிமா வாழ்க்கை:

கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்கள் நடித்து வெளிவந்த ஸ்ரீ ஷைல மஹாத்மே என்ற திரைப்படத்தில் தனது 13 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தனது 15ஆவது வயதில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படமான சின்னாத கொம்பே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தமிழில் இயக்குநர் ஸ்ரீதர் வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் என்ற மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் படத்தில் நடித்தார். படம் அபாரமாக ஓடியதை அடுத்து, குமரிப்பெண், சந்திரோதயம், தனிப்பிறவி, அரச கட்டளை, காவல்காரன், கந்தன் கருணை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், தர்மேந்திரா உள்ளிட்ட பெரிய பெரிய நடிகர்களிலுடன் நடித்துள்ளார். அரசியலில் ஈடுபடும் முன்பு தனது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான “நதியை தேடி வந்த கடல்” என்ற சரத்பாபு அவர்களுடன் நடித்து இருந்தார்.

1972ஆம் ஆண்டு, பட்டிக்காடா பட்டணமா என்ற திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதினையும், அதற்கு அடுத்த ஆண்டும் சூர்யகாந்தி படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதினையும் பெற்றுள்ளார்.