வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: புதன், 28 டிசம்பர் 2016 (18:36 IST)

சசிகலா விவகாரம்; கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்தது அல்ல - நடிகை லதா

ஜெ.வின் நீண்ட நாள் தோழியான சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மக்கள் ஏற்கும் ஒருவரை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும் என நடிகை லதா வலியுறுத்தியுள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
என் குரு, என் ஆசான் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமான அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், நான் ஏற்கனவே அறிக்கையில் குறிப்பிட்டதைப்போன்று இதுவரையில் யாரும் முக்கிய முடிவினை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. மொத்தத்தில் பெரிய குழப்பங்கள் கட்சியில் இன்னும் நீடிப்பதாகவே நான் உணருகிறேன். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் உகந்தது அல்ல.
 
அ.தி.மு.க.வை 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். தோற்றுவித்து அதனை வெற்றிக்கரமாக நடத்தியபோது அவருக்கு அடிப்படையாக அமைந்தது மக்கள் செல்வாக்கு. அவர்வழி வந்த ஜெயலலிதாவுக்கும் மக்கள் தங்களது வரவேற்பினை தந்தனர். தமிழக வரலாற்றில் தொடர்ந்து 2 முறை ஆட்சிப்பொறுப்பினை ஏற்ற 2 முதல்-அமைச்சர்களை பெற்ற கட்சி நம் அ.தி.மு.க. என்ற சாதனையை நாம் பெற வைத்ததும் அந்த மக்கள் சக்தி தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 
எனவே என்னுடைய அபிப்பிராயம், என் குரு எம்.ஜி.ஆர். கூறியது போல 'மக்கள் தீர்ப்பே-மகேசன் தீர்ப்பு' என்பதன் அடிப்படையில் முக்கிய முடிவினை எடுக்கும் காலக்கட்டம் இது. இனியும் காலதாமதம் செய்யாமல் அடிமட்டத் தொண்டர்களில் இருந்து பொதுமக்கள் வரை அனைவரும் ஏற்கும் விதமாக பொதுச்செயலாளரை முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
 
அதேசமயத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் எம்.ஜி.ஆர். வழிகாட்டிய மக்கள் சேவையையும், ஜெயலலிதா செயலாற்றிய ஆட்சி முறையும் சேர்ந்து ஒருங்கே அமையும்படி, மக்களுக்கு பணியாற்றுவேன் என உறுதிமொழி தந்து பொதுச்செயலாளர் பதவியை பொது அறிக்கையின் வாயிலாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.