வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (15:50 IST)

லலித்மோடிக்கு உதவி செய்து சிக்கலில் மாட்டிக்கொண்ட சுஷ்மா சுவராஜ்

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.


 
 
போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்ப்பதற்கு சுஷ்மா சுவராஜும், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவும் உதவினார்கள் என்று லலித் மோடி கூறியதால், எதிர்கட்சிகள் இதை கையிலெடுத்துக் கொண்டனர்.
 
மேலும், லலித் மோடிக்கு உதவி செய்த  சுஷ்மா ஸ்வராஜையும், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், சுஷ்மா, வசுந்தரா ஆகியோரின் செயல்பாடுகளை, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 107, 120பி, 166ஏ, 172, 173, 177, 217 ஆகியவற்றின் கீழ் குற்றமாக கருத வேண்டும் என்றும் காங்கிரசார் கோரிக்கை வைத்தனர். 
 
மேலும், பாஜக தலைமை  சுஷ்மா, வசுந்தரா ஆகியோரை பாதுகாக்க முயற்சி செய்யாமல் அவர்களை உடனே அமைச்சர் பதவியிலிருந்து  நீக்கம் செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்தது. 
 
அதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறுகையில், "லலித் மோடி விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு நபருக்கு, இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி எம்.பி. மூலம் சுஷ்மா சுவராஜ் உதவியிருப்பது முக்கியமான பிரச்சினை" என்றார்.
 
லலித் மோடிக்கு, சுஷ்மா சுவராஜ் உதவுவார் என எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ள அவர், தார்மீக அடிப்படையில் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த விவகாரம் பிரதமரின் ஒப்புதலின் பேரில்தான் நடந்ததா? என்பதை மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியிருந்தார்.


 

 
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான சச்சின் பைலட் கூறுகையில், "இந்திய சட்டங்களை தவிர்ப்பதற்காக இந்தியாவை விட்டு ஓடி வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு மத்திய அரசு ஏன் உதவுகிறது? என்பதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்" என்று கூறினார்.
லலித் மோடியிடம் சுஷ்மா சுவராஜ் பல கோடிகள் வாங்கி விட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
 
ஆனால், சுஷ்மா சுவராஜ், தான் மனிதாபிமான அடிப்படியிலேயே லலித் மோடிக்கு உதவினேன். தன் மீது எந்த தவறும் இல்லை. எனவே நான் பதவி விலக முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் காங்கிரசார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாராளுமன்றத்தை செயல்படவிடாமல் பல நாட்கள் தடுத்தனர். இதனால் எந்த திட்டமும் நிறைவேற்றப்படாமல், பாராளுமன்றம் பல நாட்கள்  முடங்கியது.
 
பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த சுஷ்மா “தானோ தனது குடும்பத்தினரோ லலித் மோடிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை எனவும் லலித் மோடியிடமிருந்து நானும் எனது குடும்பத்தினரும் பணம் பெற்றதாக கூறும் காங்கிரஸ் கட்சியினரால் அதனை நிரூபிக்க முடியுமா என்றும் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார்.
 
ஆனால், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே உதவியதாகவும், இதனை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துவதாகவும் சுஷ்மா குற்றம் சாட்டினார்.  ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது, அவரது மனைவி சாரதா வழக்கில் ஆஜராகியதாகவும், அதற்காக அவர் 1 கோடி ரூபாய் கட்டணமாக வாங்கியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
 
லலித் மோடிக்கு விசா வழங்கிய விவகாரத்தில் தனது கணவருக்கு தொடர்பில்லை என்றும், லலித் மோடி பாஸ்போர்ட் வழக்கில் அவர் ஆஜராகவில்லை என்றும் சுஷ்மா குறிப்பிட்டார் லலித் மோடியின் 11 வழக்கறிஞர்களில் தனது மகளும் ஒருவர் எனத் தெரிவித்த சுஷ்மா சுவராஜ், லலித் மோடியால் தானோ தனது குடும்பத்தினரோ எந்த ஆதாயமும் அடையவில்லை என தெரிவித்தார்.
 
லலித் மோடி இடமிருந்து எவ்வளவு பணம் பெற்றேன் என கேட்கும் ராகுல் காந்தி தன் குடும்பம் இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சியிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். யூனியன் கார்பைட் நிறுவன தலைவர் வாரண் ஆன்டர்சனை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசு தப்பிக்கவிட்டதாக குற்றம் சாட்டிய சுஷ்மா, அடிக்கடி விடுமுறைக்கு செல்லும் ராகுல் காந்தி, அடுத்த முறை சுற்றுலா செல்லும் போது தன்னுடைய குடும்ப வரலாறை பற்றி படிக்க நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
 
மொத்தத்தில் இந்த விவகாரத்தால், காங்கிரஸ் போன்ற கட்சிகள் பல நாட்கள் பாராளுமன்றத்தை செயல்பட விடாமல்  முடக்கின.