திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2017 (10:56 IST)

ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது? - ஆளுநர் விளக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என தமிழக ஆளுநர் வித்யாசாகர ராவ் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மர்ம மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து அதிமுக பிரமுகர் ஜோசப், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெ.வின் மரணத்தில் தனக்கே மர்மம் உள்ளது என்று கூறியதோடு, இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார். இந்த மரணம் குறித்து மத்திய அரசும் எந்தத் தகவலையும் வெளியிடாதது ஏன் என அவர் கேள்வியும் எழுப்பினார். மேலும், ஜெ.வின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டி வரும் எனவும் அவர் எச்சரித்தார்.
 
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அரசிற்கு அனுப்பிய கடிதம் கேட்டுப் பெறப்பட்டது. ஜெ. மருத்துவமனையில் இருந்த போது, அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மொத்தம் 3 கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த மாதம் 7ம் தேதி, கடைசியாக எழுதிய கடிதம் மட்டுமே மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அந்த கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா தீவிர காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
 
தொடக்கத்தில் அவருடைய உடல்நிலை சீராக இருந்தது. பின்னர் திடீரென மோசமடைந்தது. அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் மருத்துவர்கள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்ததை அடுத்து, அவருடைய உடல்நிலை சற்று தேறியது. இதனையடுத்து நவம்பர் 19 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில், கடந்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி, நான் மும்பையில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  நான் உடனடியாக சென்னை விரைந்தேன்.
 
ஆனால், தொடர்ந்து ஆபத்தான நிலையில்  இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்து விட்டதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
 
இதையடுத்து, அன்று இரவே, அதிமுக-வின் பொருளாளரும், மூத்த அமைச்சருமான ஓபிஎஸ் தன்னை வந்து சந்தித்தார். ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தன்னை அ.தி.மு.க.வின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கூறி என்னிடம் கடிதம் அளித்தார்.
 
அதைத் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டப்பிரிவு 164(1)ன் கீழ் 6ம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதலமைச்சராக பதவி பிரமானம் செய்து வைத்தேன். அவரோடு மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்” என வித்யாசாகர் ராவ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் 5ம் தேதிக்கு முன், அதாவது ஜெ. விற்கு மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டு கொண்டிருக்கும்போது இரண்டு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், மாநிலத்தின் முதல் அமைச்சர் மற்றும் ஆளுநருக்கு இடையே  நீடித்து வரும் நல்லுறவில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது எனக்கூறிய மத்திய அரசு அந்த 2 கடிதங்களை வெளியிட மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.