பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று நம் நாட்டு மக்களுக்கு அளித்த செய்தியை கீழே தந்துள்ளோம்.
பூரண சுதந்திரம் என்பதை முதலில் உச்சரித்தவர் ஸ்ரீ அரவிந்தர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் ஊட்டியவர். இந்தியாவின் சுதந்திரம் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பதனை தனது ஆன்மீக ஆற்றலால் கண்டுகொண்டு இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற பிந்நாளில் ஆன்மீக பணியை மேற்கொண்டவர். இந்திய தேசிய உணர்வின் சின்னமாகவும், மானுடத்தின் ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழும் ஸ்ரீ அரவிந்தர், ஆகஸ்ட் 14, 1947 அன்று விடுத்த ஆங்கில செய்தியின் தமிழாக்கம் இது.
ஸ்ரீ அரவிந்தரின் செய்தி :
ஆகஸ்ட் 15, 1947 சுதந்திர இந்தியாவின் பிறந்த நாள்.
இந்நாள் அவளுடைய பழைய யுகத்தின் முடிவிற்கும், புது யுகத்தின் துவக்கத்திற்குமான அடையாளமாகும்.
இந்நாளையே, ஒரு சுதந்திர தேசத்தின் மக்களாகிய நாம், நமது வாழ்க்கை மற்றும் செயல்பாட்டின் வாயிலாக மானுடத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு, ஆன்மீக எதிர்காலத்திற்கு வித்திடும் ஒரு புது யுகத்தின் துவக்க நாளாகவும் மாற்றலாம்.
ஆகஸ்ட் 15 எனது பிறந்த நாள். அந்நாளுக்கு இவ்வளவு பரந்த முக்கியத்துவம் கிடைத்திருப்பது உண்மையிலேயே எனக்கு பெருமையாய் உள்ளது. இதனை தற்செயலான நிகழ்வாக அல்லாமல் முன்நிச்சயிக்கப்பட்ட ஒரு ஏற்பாடாக, எதற்காக எனது வாழ்க்கையின் துவக்க கட்டத்தில் பணியாற்றினேனோ அந்த உன்னத இலட்சியம் முழுமையாக நிறைவேற, என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்திச் செல்லும் இறைவனின் ஒப்புதலாகவும் அத்தாட்சியாகவும் கொள்கின்றேன். அதைவிட, இவ்வுலகில் என்னென்ன நிகழ வேண்டும் என நான் எதிர்பார்த்தேனோ, அன்று நடைமுறையில் சாத்தியமற்ற கனவுகளாக தெரிந்த அனைத்தும், அனைத்து உலக-இயக்கங்களும் இன்று நிறைவேறி வருவதையும், எனது வாழ்நாளிலேயே அவைகள் சாதனைகளாவதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வனைத்து இயக்கங்களிலும் சுதந்திர இந்தியா ஒரு முக்கிய பங்காற்றவும், அதற்கு தலைமையேற்கவும் முடியும்.
ஒரு சுதந்திரமான, ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கும் புரட்சி இயக்கமே (எனது) முதல் கனவாகும். இந்தியா இன்று விடுதலை பெற்றுவிட்டது. ஆனால் ஒற்றுமையை சாதிக்கவில்லை. வெள்ளைய ஏகாதிபத்யம் ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததைப்போல, விடுதலைக்குப்பின் இந்தியா மீண்டும் பல நாடுகளாக சிதறுண்டு குழப்பத்தில் ஆழ்ந்துவிடுமோ என்று கூட ஒரு கட்டத்தில் தோன்றியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. ஒரு முழுமையான ஒருங்கிணைப்பாக இல்லாவிட்டாலும், மிகப்பெரிய, சக்திவாய்ந்த தேசமாக இந்தியா நிலைபெற்றுவிட்டது. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் எவ்வித பாகுபடுத்தலோ, பிளவோ இன்றி தீர்க்கப்படும் என்ற அரசியல் நிர்ணய சபையின் அறிவுப்பூர்வமான அதிரடி கொள்கை நம்பிக்கையூட்டுகிறது. ஆனால் இந்து - முஸ்லீம் எனும் பழைய சமூகப் பிரிவினை - அரசியல் ரீதியாக இந்நாடு இரண்டாகப்பட்டதனால் - மேலும் கடினமாகிவிட்டதாகத் தோன்றுகிறது பிரிவினை ஒழிந்தாக வேண்டும்
இன்றைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட இந்த பிரிவினை முடிந்துபோன ஒன்றாக கொள்ளாமல் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதப்படும் எனறு நம்புகிறேன். ஏனெனில் இப்பிரிவினை நீடித்தால், அது இந்தியாவை மிகவும் பலவீனப்படுத்திவிடும் என்பது மட்டுமல்ல, முடமாக்கிவிடக்கூடும். இதனால் சமூக மோதல்கள் நிரந்தரமாகிவிடும் சாத்தியம் உள்ளது. அதன் விளைவாக இந்தியாவின் மீது வெளியில் இருந்து மீண்டும் படையெடுப்பும், அன்னிய ஆட்சியும் ஏற்படலாம். இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சியும், செழுமையும் தடைபடலாம். உலக நாடுகளிடையே அவளின் நிலை பலவீனமாகலாம். அவளின் விதி சக்தியற்றதாகலாம், அல்லது முறியடிக்கப்படலாம். அவ்வாறு ஏற்பட்டுவிடக்கூடாது; (இந்தியா - பாகிஸ்தான் எனும்) பிரிவினை ஒழிந்தாக வேண்டும். அது இயற்கையாக நிறைவேறும் என்று நம்புவோமாக; அமைதிக்காகவும், இணக்கத்திற்காகவும் மட்டுமின்றி பொதுவான செயல்பாட்டிற்கும் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்வதன் வாயிலாக அது நிறைவேறும். இந்த வழியில், உறுதியான ஒற்றுமை ஏதாவது ஒரு வடிவில் - அது எப்படிப்பட்ட வடிவில் வரும் என்பது முக்கியமல்ல, ஆனால் வந்தே தீரும். எப்படியாவது, எந்த வழியிலாவது இந்த பிரிவினை ஒழிந்தே ஆகவேண்டும்; இந்தியாவின் எதிர்காலத்தை பெருமைக்குரியதாக்க இந்த ஒற்றுமை மிக அவசியம், அது சாதிக்கப்பட்டேயாக வேண்டும்.
|