ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (11:12 IST)

மக்கள் தொகை அதிகரித்தால் என்ன நடக்கும்?? – இன்று உலக மக்கள் தொகை தினம்!

World Population Day
உலகம் முழுவதும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரும் பிரச்சினையாக பார்க்கப்படுபவற்றில் ஒன்று மக்கள் தொகை. நாளுக்கு நாள் உலகளாவிய மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1987ம் ஆண்டில் ஜூலை 11ம் தேதி கணக்கீட்டின்படி உலக மக்கள் தொகை 500 கோடியாக அதிகரித்தது. அந்த நாளே உலக மக்கள் தொகை தினமாக அன்று முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 36வது மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த 36 ஆண்டுகளுக்குள் உலக மக்கள் தொகை 700 கோடியை தாண்டியுள்ளது. அதாவது கடந்த 36 ஆண்டுகளில் மட்டும் 200 கோடி மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. ஆனால் சமீப காலத்தில் இந்த நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய கணக்கீட்டின்படி ஆண்டுதோறும் மக்கள் தொகை விகிதம் அதிகரித்து வரும் நாடுகளில் சிரியன் அரப் குடியரசு, நிகர், ஈகுவடர் கினியா, அங்கோலா, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன.

மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பது ஒரு நாட்டை பொருளாதார ரீதியாகவும், மனிதவள ரீதியாகவும் பெரிதும் பாதிக்கும் காரணிகளாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. இந்நிலையில் இயற்கை வளம், வேளாண் வசதிகள், உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ள நாடுகள் தங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிற நாடுகளிலிருந்து இறக்குமதி மற்றும் உதவிகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதுதவிர அதிகரித்து வரும் மக்கள் தொகையால் வாழ்விடங்களுக்காக இயற்கை வனப்பகுதிகள் அழிக்கப்படுதல், நகரமயமாக்கல் உள்ளிட்டவையும் நடந்தேறுகின்றன. உணவு உற்பத்தியையும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டிய தேவை எழுகிறது. மருத்துவ வசதி, சுகாதாரம் போன்றவையும் அனைவருக்கும் கிடைக்க முடியாத நிலை பல நாடுகளில் உள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் உலகளாவிய அமைப்புகள் பலவும் மக்கள் தொகை கட்டுக்குள் இருப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்து வருகின்றன.