1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (19:07 IST)

9-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்!-அன்புமணி

Anbumani
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்; 9-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்! என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''15-ஆம் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனே தொடங்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக் கழகங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், வரும் 9-ஆம் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

பொங்கல் திருநாளுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட ஏராளமான முதன்மை பணிகள் இருக்கும் நிலையில், பொங்கல் திருநாளுக்கு 6 நாட்கள் முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். போக்குவரத்துத் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை; அவை பல ஆண்டுகளாக அவர்களால் வலியுறுத்தப்பட்டு வருபவை தான். அது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை இயன்ற வகையில் நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.

அந்தக் கடமையை நிறைவேற்ற அரசு தவறி விட்டதன் விளைவாகவே வேலைநிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுகளை அடுத்த ஓரிரு நாட்களில் அரசு நடத்த வேண்டும். அந்தப் பேச்சுகளில் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் போக்குவரத்து அமைச்சரே பங்கேற்க வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி , அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.