ஒருவேளை உணவுக்கே திண்டாட்டம்! – இலங்கையில் மக்கள் போராட்டம்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
இலங்கை அரசின் அன்னிய செலவாணி இருப்பு குறைந்ததால் ஏற்றுமதி, இறக்குமதியில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதே அரிதாகியுள்ளது. கிடைத்தாலும் விலை பல மடங்கு இருப்பதால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடுகளில் பேப்பர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இதனால் நாளிதழ்கள் பல அச்சடிக்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ரத்மலானே பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமசதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.