சோனி சைபர் தாக்குதல் விசாரணையில் பங்கேற்கத் தயார்: வடகொரியா

சோனி சைபர் தாக்குதல் விசாரணையில் பங்கேற்கத் தயார்: வடகொரியா
Last Modified ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (07:22 IST)
சோனி பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கணினி வலயமைப்பில் அத்துமீறி நுழைந்து செய்யப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருக்கிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ள வட கொரியா, இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று கண்டுபிடிக்க அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு விசாரணை செய்யத் தயார் என்று கூறியுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் வடகொரியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பிவருவதாக வடகொரிய வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
 
ஆனால் வடகொரியா மீதான குற்றச்சாட்டுகள் தவறென்று கூட்டு விசாரணைகள் நிரூபிக்கும் என்று அது தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் உளவு நிறுவனம் போல மோசமான வழிமுறைகளைப் பயன்படுத்தாமல், தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும் என வடகொரிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கூட்டு விசாரணையை திட்டத்தை அமெரிக்கர்கள் நிராகரித்தால் மோசமான விளைவுகள் ஏற்படுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சைபர் தாக்குதல்
 
சோனி நிறுவனத்தின் மீது நடந்த சைபர் தாக்குதலாலும் அதன் பின்னர் வந்த மிரட்டல்கள் காரணமாகவும் தாங்கள் தாயாரித்துள்ள 'தி இண்டர்வியூ' என்ற அரசியல் நையாண்டி திரைப்படத்தை வெளியிடாமல் நிறுத்திக்கொள்வதாக சோனி வெள்ளியன்று அறிவித்திருந்தது.
 
வடகொரிய தலைவர் கிம் யாங் உன்-னை படுகொலை செய்ய சதித்திட்டம் ஒன்று தீட்டப்படுவதாக இந்தப் படத்தின் கதையில் வருகிறது.
 
கிறிஸ்துமஸ் நாளில் இந்தப் படம் வெளியிடப்படுவதாக இருந்தது.
 
ஆனால் அன்றைய தினம் வெளியிடுவதை திரையரங்குகளில் வெளியிடுவதை ரத்து செய்துவிட்டு, இணையம், தொலைக்காட்சி போல வேறு விதமாக வெளியிடுவது பற்றி ஆராய்ந்து வருவதாக சோனி நிறுவனம் கூறியது.
சோனி நிறுவனத்தின் மீது சென்ற மாதம் மோசமான சைபர் தாக்குதல் நடந்திருந்தது. திரை நட்சத்திரங்கள் பற்றிய தனிப்பட்ட விவரங்களும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய தனிப்பட்ட மின் அஞ்சல்களும் வெளியில் கசிந்திருந்தன.
 
மிரட்டல்கள்
 
தி இண்டர்வியூ படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என ஹேக்கர்கள் குழு ஒன்று மிரட்டல் விடுக்க அமெரிக்காவின் திரையரங்க நிறுவங்கள் பல அப்படத்தை திரையிட மறுத்திருந்தனர்.
 
இதனை அடுத்தே சோனி அப்படத்தின் வெளியீட்டை ரத்து செய்தது.
 
தாக்குதலின் பின்னணியில் பியொங்யாங் அரசாங்கம் இருக்கிறது எனக்கூறி அது சம்பந்தமான தரவுகளை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருந்தது.
 
வடகொரியா நினைத்தால் அமெரிக்காவில் ஒரு படம் வெளியாக விடாமல் தடுக்க முடியும் என்ற நிலை உருவாக சோனி நிறுவனம் இடமளித்திருக்கக்கூடாது எனக்கூறி அமெரிக்க அதிபர் ஒபாமா விமர்சித்திருந்தார்.
 
சோனி மீதான சைபர் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என வடகொரியா வலியுறுத்தினாலும், அமெரிக்காவில் அதை யாரும் பெரிதாக நம்பவில்லை என்றே தெரிவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :