வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:41 IST)

அணு ஆயுதத்தில் கை வைத்தால் அவ்வளவுதான்..! – ரஷ்யாவிற்கு ஜோ பைடன் எச்சரிக்கை!

Biden
உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்யா தான் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரஷ்ய அடையாள அட்டைகளை அளித்து அப்பகுதிகளை ரஷ்யாவின் பிராந்தியமாக மாற்றி வருகிறது.

கடந்த 6 மாத காலமாக நடந்து வரும் போரால் இருதரப்பு ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் உக்ரைன் பொதுமக்களும் ஏராளமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் உக்ரைனின் பல பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா ரகசிய திட்டமிடுவதாக ஐரோப்பிய நாடுகள் சந்தேகிக்கின்றன.


இந்த சந்தேகம் குறித்து மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “இது இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய போரின் முகத்தை மாற்றுவதாக இருக்கும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து தக்க பதில் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் இந்த சந்தேகம் தவறென்றும், அணு ஆயுதத்தை பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது.