வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (08:38 IST)

எல்லாரையும் வாஷ் அவுட் பண்றேன்? உயர் அதிகாரிகளுக்கு டாட்டா சொன்ன எலான் மஸ்க்!

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பலரை பணியை விட்டு நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் டாப் பில்லியனரான எலான் மஸ்க் சமீபத்தில் புகழ்பெற்ற ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூபாய் மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடி) அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்குவதாக அறிவித்தார்.

ஆனால் பின்னர் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை அந்நிறுவனம் அளிக்க மறுப்பதால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதை தாமதப்படுத்தினார். இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


இந்த வழக்கில் இன்று வெள்ளிக்கிழமைக்கும் எலான் மஸ்க் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ள எலான் மஸ்க் நேற்றே கைக்கழுவும் தொட்டியுடன் ட்விட்டர் அலுவலகத்தில் நுழைந்தார்.

பலரை வாஷ் அவுட் செய்ய போவதற்கான அடையாளமாக அதை கொண்டு சென்றார் என கூறப்படுகிறது. அதன்படியே தற்போது வெளியான தகவல்களின்படி, ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து விட்டாராம் எலான் மஸ்க். அவர்கள் தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K