சிறிலங்க படைகள் தாக்குதலில் 2 மாதத்தில் 2,018 தமிழர்கள் பலி!

Webdunia| Last Modified திங்கள், 2 மார்ச் 2009 (18:21 IST)
இலங்கையில் சிறிலங்க அரசின் இராணுவமும், விமானப் படையும் தமிழர் பகுதிகளின் மீது தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 700 சிறுவர்கள் உட்பட 2018 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வானொலி கூறியுள்ளது.

சிறிலங்கப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 2,000 பேரைத் தவிர, மேலும் 5,000 பேர் படுகாயமுற்றுள்ளனர்.

சிறிலங்க விமானப் படையினர் குண்டுகளை வீசும் போதும், பீரங்கித் தாக்குதல் நடத்தும் போதும் அங்கிருந்து மக்கள் சிதறி ஒடும் போது, அவர்களின் பிள்ளைகள் காணாமல் போய் விடுகின்றனர். அப்படி காணாமல் போன பிள்ளைகளை கண்டுபிடித்து மீட்டு ஒப்படைக்க ‘உறவுப் பாலம்’ எனும் வானொலி நிகழ்ச்சியை புலிகள் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே கொல்லப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை தொகுத்து புலிகள் அளித்துள்ளனர்.

சிறிலங்க அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதிவரையிலான 3 வாரங்களில் மட்டும் 1,123 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், 4,027 பேர் காயமுற்றதாகவும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்தான் மக்கள் இருந்துவருகின்றனர். அவர்களின் மீது விமானத்தில் இருந்து குண்டுகள், சிதறி வெடிக்கும் கொத்துக் குண்டுகள் ஆகியவற்றை வீசியும், தொடர்ந்து பல மணி நேரங்கள் பீரங்கித் தாக்குதல் நடத்தியும் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது சிறிலங்கப் படைகள்.


இதில் மேலும் படிக்கவும் :