ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (16:14 IST)

எது ஆண்மையில்லாத்தனம்? இளையராஜாவுக்கு ராயல்டி கொடுத்துள்ளோம் - 96 படக்குழு அதிரடி !

தமிழ் சினிமாக்களில் வெளியாகும்  பல படங்களில் இளையராஜாவின் பழையப் பாடல்கள் ரெஃபரன்ஸாகவோ அல்லது பின்னணியிலோ வைக்கப்படுகின்றன. அந்தவகையில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் 96, விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது அதன் இசை தான்.      
 
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின்  இசை மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. படத்தில் வரும் கதாநாயகி கதாபாத்திரம் சிறு வயது முதலே பாடகி ஜானகியின் ரசிகையாக இருந்து அவரது பாடல்களையே பாடி வருவார். கதாநாயகனுக்கு கதாநாயகி பாடும் "யமுனை ஆற்றிலே" பாடலை பாடி கேட்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு கட்டத்தில் அதை கதாநாயகி பாட கதாநாயகன் கேட்க என அருமையாக அந்த காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். 
 
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் இளையராஜா பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டியில் அவரிடம் 96  மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் அதிகமாக இளையராஜா பாடல்களும் அவரது பெயரும் பயன்படுத்தப்பட்டதை குறித்து கேள்வி கேட்டபோது.


 
அதற்கு பதிலளித்த இளையராஜா ’இது மிகவும்  தவறான விஷயம். 80களில் , 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன்  நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க முடியாதா?. இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது’ எனக் கடுமையாக சாடினார். இந்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 
இதற்குப் பதிலளிக்கும் விதமாக இளையராஜா இசையமைத்த பிதாமகன் படத்தில் சூர்யா மற்றும் சிம்ரன் நடனமாடும் பல பழையப் பாடல்களின் தொகுப்பை சுட்டிக்காட்டி இதுமட்டும் ஆண்மையில்லாத தனம் இல்லையா? எனக் கேள்வியெழுப்பி இளையராஜாவின் இத்தகைய கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. 


 
இந்நிலையில் ட்விட்டர்வாசி ஒருவர் இளையராஜாவின் கருத்தை ஆதரித்து  இளையராஜாவின் பாடலை பயன்படுத்துவதற்கு முன் அவரது அனுமதியை பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு 96 படத்தில் பணிபுரிந்த ஒருவர் ரீட்விட் செய்து “நான் 96 படத்தில் பணிபுரிந்துள்ளேன். நாங்கள் பயன்படுத்திய ஒவ்வொரு இளையராஜா பாடலுக்கும் அவர் அனுமதியுடன் ராயல்டி கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.