ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:31 IST)

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கா இப்படி? சாடிய ஜேம்ஸ் வசந்தன்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் கூற்று குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். 

 
பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இந்நிலையில் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவர் குறிபிட்டுள்ளதாவது, மிகத் திறமையானவர்தான். அதை ஒட்டுமொத்த தமிழினமே புரிந்துகொண்ட உண்மை. அதனால்தான் அவரை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக அங்கீகரித்துக் கொண்டாடி வருகிறோம். அது வியாபரத்தளந்தான். இருந்தாலும் அதன் வழியாக வருகிற இந்த உயரிய கலையின் படைப்புகளைக் கேட்டு இன்புற்று அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம்.
 
அவர் ஒரு தனி மனிதர். அவருக்கென்று விருப்பு வெறுப்புகளும், கொள்கைகளும் தேர்வுகளும் இருக்கும் - நம் ஒவ்வொருவருக்கும் இருப்பதைப் போல. அதனால் அந்தக் களத்தைத் தாண்டிய அவரது தனிப்பட்ட செயல்பாடுகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 
 
ஆனாலும் ஒருவருக்கு இருக்கிற சமூக அடையாளத்தை வைத்து அவருடைய கூற்றுகளும் கொள்கைகளும் கூர்ந்து நோக்கப்படுவதைத் தவிர்க்க இயலாது. அந்த அடிப்படையில், இப்படிப்பட்ட இடத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் தங்களை நடப்பித்துக்கொள்ள வேண்டும்.
 
ஒரு இனத்தின், சமூகத்தின், நாட்டின் நலன்சார்ந்த விஷயங்களில் கருத்துகளை வெளியிடும்போது மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். சமீபத்தில் இவர் சொல்லியிருக்கிற ஒரு கருத்து அவருக்கு இருக்கிற கருத்துரிமையின் வெளிப்பாடு. ஆனால் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும்.
 
கடந்த 20 ஆண்டுகளாக இந்த நாடு பார்த்து வருகிற சர்ச்சைக்குரியவரை, ஒரு இனக்கலவரத்தின் கறைபடிந்தவரை, இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கிற சமத்துவச் சிந்தனையுள்ள ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?
 
எனக்குப் பிடித்தவர், என் அபிமானத்துக்குரியவர் என்று சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை. சந்தேகத்துக்கு இடமான ஒருவரை நிகரற்ற ஒரு வரலாற்றுத் தலைவனுடன் ஒப்பிட்டதால்தான் எதிர்ப்பு வருகிறது.
 
எஞ்சியிருக்கிற அந்த ஒரே உன்னத விருது இலக்கா? கலைத்துறை சார்பாக நியமிக்கப்படுகிற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இலக்கா? அல்லது மாநில ஆளுகை மீது ஏதாவது சொந்தப் பகையா? இப்படிப் பலவற்றை தூண்டுகிறது அவரது கூற்று. ஏனெனில், இது உண்மைக்குப் புறம்பான பாராட்டு. 
 
அரசியல் கட்சிகள் இதைவிட கேலிக்கூத்தான பட்டங்களையும் பாராட்டுகளையும் தங்கள் தலைவர்களுக்குச் சூட்டி மகிழ்வர். அது அரசியல். யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால், இவர் கலைத்துறையைச் சேர்ந்தவர். அதனால் பல ஐயங்கள் பிறக்கின்றன. தவிர்த்திருக்கலாம்.