பாகுபலி2-வில் உள்ள 5 தவறுகள் : பட்டியலிடும் விக்னேஷ் சிவன்
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள பாகுபலி-2 தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை பார்த்த பலரும் ராஜமவுலி, நடிகர் பிரபாஸ் உட்பட மொத்த படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். இப்படம் 3 வெளியாகி 3 நாளில் ரூ.500 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவின் வரலாற்றில் சாதனையை நிகழ்த்தியுள்ளது. மொத்தமாக இப்படத்தின் வசூல் ரூ.1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், போடா போடி, நானும் ரவுடிதான் ஆகிய படங்களை இயக்கியவரும், நடிகை நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இப்படத்தில் 5 தவறுகள் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1. வெறும் ரூ. 120ஐ கொடுத்து அருமையான படத்தை மக்கள் பார்க்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இன்னும் அதிகமாக கொடுக்கப்பட வேண்டும். கலெக்ஷன் பெட்டி அல்லது தயாரிப்பாளரின் வங்கி கணக்கு கொடுத்திருந்தால் மக்கள் அதில் இன்னும் கொஞ்சம் பணம் செலுத்துவார்கள்.
2. படத்தின் நீளம் மிகவும் குறைவாக இருக்கிறது. இப்படி ஒரு அருமையான அனுபவம் உள்ள படத்தை ரசிக்க வெறும் 3 மணி நேரம் போதாது.
3. படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து விஷயங்களும் கனக்கச்சிதமாகவும், தெளிவாகவும் இருக்கிறது. இது பெரும்பாலான இயக்குனர்களின் நம்பிக்கை, தலைக்கணம் மற்றும் அவர்களின் தயாரிப்பின் மீதான அவர்களின் சிந்தனை ஆகியவற்றை சின்னாபின்னமாக்கி விட்டது.
4. இது முடிவாக இருக்கக் கூடாது. ஏனெனில், பாகுபலியை பற்றி இன்னும் 10 பாகங்கள் வெளிவந்தால், ரசிகர்கள் திரையில் இன்னும் பல அதிசயங்களை எதிர்காலத்தில் பார்க்க முடியும்.
5. சிறந்த, தரமான படம் வெளிவந்திருக்கிறது. இது சினிமாகாரர்களுக்கு துயரமான நேரம். ஏனெனில், இந்திய திரையுலக வரலாற்றில், பாகுபலி படத்தின் சாதனைகளை முறியடிக்க இன்னும் எத்தனை வருடங்களாகுமோ தெரியவில்லை.
என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலோட்டமாக பார்ப்பதற்கு, இதெல்லாம் தவறுகள் என அவர் கூறியிருந்தாலும், உண்மையில் இப்படத்தை விக்னேஷ் சிவன் மறைமுகமாக பாராட்டியுள்ளார் என்பதே உண்மை...