சிற்றிதழ் : கவிதாசரண்

Webdunia| Last Updated: திங்கள், 24 பிப்ரவரி 2014 (18:56 IST)
"இதழாய் ஒரு எழுத்தியக்கம்" என்ற முழக்கத்துடன் மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கும் "கவிதாசரண்" இதழின் பெயரையே அதன் ஆசிரியராகக் கொண்டு வருகிறது. மார்க்சிய அரசியல் வீழ்ச்சியடைந்த பிறகு தீவிர இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திவரும் துறையான தலித் அரசியல், பண்பாடு ஆகியவற்றில் புதிய விவாதங்களையும், கருத்துகளையும் கிளம்பி வரும் கவிதாசரண், பெரியார் ஒரு தலித் விரோதி போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்து தனது எதிர்வினையை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இதழிலிருந்து, "தமிழ் இலக்கியவாதிகள்-2" என்று அ.மார்க்ஸ் எழுதியுள்ள "கட்டுரை" ஒன்றை வெப்உலகம் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.)

தமிழ் இலக்கியவாதிகள் - 2

அ. மார்க்ஸ

சென்ற மார்ச் மத்தியில் "உலகமயமும் தலித்களும்" என்றொரு கருத்தரங்கை தோழர் ரஜினி மதுரையில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கு பெறச் சென்றிருந்த நானும் சுகனும் (பாரீஸ்) நண்பர் பழனிச்சாமி புதிதாய் வாங்கியிருந்த காரில் கன்னியாகுமரி வரை சும்மா "ஜாலி"யாகக் கிளம்பினோம். சுகனுக்கு இரண்டு ஆசைகள். கிடைத்தால் கொஞ்சம் "கள்" அருந்திப் பார்ப்பது; கவிஞர் என்.டி.ராஜ்குமாரைச் சந்திப்பது. எங்களின் முதலாவது ஆசை நிறைவேறவில்லை (வேறு வகையில் அதை ஈடுகட்டினோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். சுகன்தான் பாவம். அவர், கள் தவிர வேறு கதையும் அருந்துவதில்லை என்றார்) ராஜ்குமாருடன் பொழுது இனிதாய்ப் போனது. அவர் சொன்ன ஒரு தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக இந்தது. சில நாட்களுக்கு முன் (மார்ச் 9) நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் எழுத்தாளர் லட்சுமி மணிவண்ணனை தமிழினி வசந்தகுமாரும் ஜெயமோகனும் அடித்துவிட்டார்கள் என்பதுதான். குடித்துவிட்டுத் தொந்தரவு செய்ததால் அப்படி அவர்கள் நடந்துகொள்ள நேர்ந்தது என்கிற ரீதியில் ராஜ்குமார் குறிப்பிட்டார்.
மணிவண்ணனை அறிந்த எங்களுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்தவர். தனது நூலைசசுந்தர ராமசாமிக்கு அர்ப்பணித்திருந்தார். எனினும் காலச்சுவடிலிருந்து விலக்கப்பட்டவர் அல்லது விலகியவர். எந்த நிறுவனத்திற்குள்ளும் தன்னை நிறுத்திக் கொள்ளும் சாதுரியமற்றவர். குடிப்பவர். மனைவி குழந்தையுடன் சிரமப்படுபவர். தனக்கென ஒரு மொழியும் கற்பனைத் திறனும் உள்ள எழுத்தாளர்... இப்படியாகத்தான் மணிவண்ணன் எனக்கு அறிமுகம். மூன்று அல்லது நான்கு முறை அவரை நான் சந்தித்திருப்பேன்.
நாங்கள் சென்னையில் நடத்திய கூட்டங்களிலும் இப்படியான "கலாட்டாக்களை" அவர் நடத்தியுள்ளார். "அடையாளம்" நூல்கள் வெளியீட்டு விழாவில் நல்ல போதையுடன் வந்திருந்த அவர் பேசிக் கொண்டிருந்தபோது மேடைக்கு வந்தார். "போரடிக்குது; சீக்கிரம் கூட்டத்தை முடியுங்கள்" என்றார். நண்பர்கள் அவரை அழைத்துக் கொண்டு போனார்கள். மீண்டும் வந்து குடிப்பதற்குக் காசு கேட்டார். இப்படியாக அன்றைய கூட்டம் கழிந்தது.எப்படி இருந்தாலும் கூட்டத்தில் அவர் பலர் முன்னிலையில் அடிபட நேர்ந்தது என்பது எங்களைப் புண்படுத்தியது. ராஜ்குமார் வழிகாட்டலில் மணிவண்ணனின் வீட்டிற்குச் சென்றோம். என்ன நடந்தது என ராஜ்குமார் முன்னிலையிலேயே கேட்டேன். அவர் சொன்னதிலிருந்து :
வழக்கம் போல அன்றைக்கும் குடித்திருக்கிறார். காலச்சுவடு கம்பெனியைச் சேர்ந்த "எம்.எஸ்." என்பவரின் நூல்கள் வெளியீட்டுக் கூட்டம் அது. "தமிழினி" சார்பாக நடைபெற்ற அந்த விழாவை ஜெயமோகன் ஏற்பாடு செய்துள்ளார். எம்.எஸ். ஏற்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார். "எனது பேராண்டிகள் இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்கள்" என அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது, "நானும் உங்க பேராண்டிதான் அண்ணாச்சி" என்று சொல்லிக் கொண்டு மேடையில் ஏறி தனது "சிலேட்" இதழ் ஒன்றை அவருக்குபபரிசளித்துள்ளார் மணிவண்ணன். உடனடியாக அவரைப் பிடித்துத் தள்ளி வெளியே இழுத்துச் சென்றுள்ளனர். கூட்டம் முடிந்தவுடன் வசந்தகுமார் தொடங்கி வைக்க ஜெயமோகன் மணிவண்ணனை நாலு சாத்து சாத்தியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :