வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்படும் ஆடி மாதத்தின் சிறப்புகள்...!

ஆடி வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வழிபாடு களைகட்டும். தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. பூமிதேவி ஆண்டாள் நச்சியாராக அவதரித்தது ஆடி மாதத்தில் தான். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன், ஆடி மாதத்தை அம்மன் மாதமாக இருக்க வரமளித்தார். 
சிவனுடைய சக்தியை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் விசேஷமானதாக இருக்கும். ஆடி மாதத்தில் சிவன் சத்திக்குள் ஐக்கியமாகி விடுவதாக ஐதீகம். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகின்றன.
 
மஞ்சப்பால்: மழை தெய்வமான மாரியம்மனுக்கு ஆடிச்செவ்வாய் கஞ்சி கூழ் படைத்து வழிபடுவர். ஆடிக்கூழ் வார்த்தல் அம்மனருளால் நாடு செழிக்க மழை  பெய்யும் என்பது ஐதீகம். விரதமிருந்து பெண்கள் வேப்பிலை சேலை உடுத்திக்கொண்டு கோயிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.அம்மனுக்கும், வாகனமாக சிம்மத்திற்கும் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வர். மஞ்சள் பொடி கலந்த தண்ணீருக்கு ‘மஞ்சப்பால்’என்பது பெயர்.  கன்னிப்பெண்கள் மஞ்சப்பால் அபிஷேகம் செய்ய அம்மன் மனம் குளிர்ந்து திருமணயோகம் உண்டாகும்.
 
மாவிளக்கு: ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில்  இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்தூள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து, அம்மன் முன் விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்கையே அம்மனாகக்  கருதி வணங்குவர். மாரி, காளி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. இதனால் நோய்நொடி நீங்கி ஆரோக்கிய  வாழ்வு உண்டாகும்.
 
ஆடிப்பால்: ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியருக்கு ஆடிச்சீர் கொடுத்து புதுமாப்பிள்ளை, பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பர். அதன்பின் மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்னும் தேங்காய்ப்பால் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைப்பர். பெண் தாய் வீட்டில் தங்குவாள். ஆடியில் கருத்தரித்தால்  சித்திரையான கோடைகாலத்தில் குழந்தை பிறக்கும். இதனால் தாய், சேய் உடல்நலன் பாதிக்கலாம் என்பதால் இந்த பழக்கத்தைக் கடைப்பிடிப்பர்.