கடகம் - துர்முகி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2016

லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 13 ஏப்ரல் 2016 (16:16 IST)
விகடகவிகளே! இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்யஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதிலே உதயமாகும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உண்டு. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோவில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
இந்தாண்டு முழுக்க 5-ம் இடத்திலேயே சனி அமர்ந்திருப்பதால் முடிவுகள் எடுப்பதில் ஒருவித குழப்பமும், தடுமாற்றமும் இருந்துக் கொண்டேயிருக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் அவர்களின் நண்பர்கள் யார் என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் பாடத்தில் உயர்கல்விப் பெற அனுமதியுங்கள்.
மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தமாக அதிகம் செலவு செய்து சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலை தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாலைகளை கடக்கும் போது நிதானம் தேவை. அலைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள். வயிற்று வலி, இடுப்பு கழுத்து வலியால் சிரமப்பட்டீர்களே! இனி வலி நீங்கி வலிமைக் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது.
துர்முகி வருடம் பிறக்கும் போது சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று அபாயிமெண்ட் ஆடர்க்காக காத்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள் நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சமூகத்தில் மதிக்கத் தகுந்த அளவிற்கு கௌரவப் பதவியில் அமருவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிட்டும். சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.
03.12.2016 முதல் 15.01.2017 வரை செவ்வாய் ராசிக்கு 8-ல் மறைவதால் வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். மனைவிக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் வந்துப் போகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

8.11.2016 முதல் 03.12.2016 சுக்ரன் 6-ல் மறைவதால் வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், கழுத்து வலி, தோலில் நமைச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும்.
01.08.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உடல் நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். அழகு, இளமைக் கூடும். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனம், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்யமும் சீராகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள்.
பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரத்தையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.
வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஊர் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4-ல் அமர்வதால் தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். அவருடன் மோதல்கள் வரக்கூடும். அவருக்கு நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, அடிக்கடி தலைச்சுற்றல் வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். உங்களை சிலர் தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். இடமாற்றம் உண்டு.

இந்தாண்டு முழுக்க நிழல் கிரகங்களான ராகு 2-ம் வீட்டிலும் கேது 8-லும் நீடிப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். பார்வைக் கோளாறு வரக்கூடும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. வெளிப்படையாகப் பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நல்லதே சொன்னாலும் பொல்லாப்பாக போய் முடிய வாய்ப்பிருக்கிறது. காலில் அடிப்படக்கூடும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.
பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். தனி நபர் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.
வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். பழைய பாக்கிகளை போராடித் தான் வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, லாட்ஜிங், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷ்னரி, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்து போங்கள். சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் லாபம் வரும். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.
உத்யோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி வேறுயிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு.

சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். புதிய வாய்ப்புகள் வந்தால் தீரயோசித்து முடிவெடுங்கள். வைகாசி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகளும், விரும்பிய இடத்திற்கே வேலை மாற்றமும் உண்டாகும்.
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களை நம்பி பழைய நண்பர்களை விட்டுவிடாதீர்கள். பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். கல்யாண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும்.

மாணவ-மாணவிகளே! படிப்பு மட்டுமல்லாமல் ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற மொழியறிவுத் திறனையும் நீங்கள் அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. அறிவியல் சம்பந்தமான இடங்களுக்குச் சென்று வருவது நல்லது. பள்ளி மாற வேண்டி இருக்கும். போராடி சில பாடங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

இந்தப் புத்தாண்டு பிறரை எதிர்பார்க்காமல் சுய உழைப்பால் முன்னேற்றுவதாக அமையும்.

பரிகாரம்:

அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வணங்குங்கள்.இதில் மேலும் படிக்கவும் :