1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை கிரிவலம் வருவதால் கிடைக்கும் பலன்கள்...!

சூரியனும், சந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வலம் வந்து வழிபட்ட அஷ்டலிங்க சன்னதிகளுக்கு நடுவே, கிரி உருவான  கருணைக்கடலாக காட்சி தரும் ஜோதிமலை, வலம்வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்கும் அருள்மலைதான் திருவண்ணாமலை.
சித்தர்களும், ரிஷிகளும்,யோகிகளும், மகான்களும் தவமிருந்து வழிபட்ட இன்றைக்கும் அருவமாக வலம் வந்து வழிபடுகிற அண்ணாமலையை  கிரிவலம் செல்லும் பக்தர்கள், மூலிகை, சந்தனம், ஜவ்வாது, சாம்பிராணி, விபூதி, வாசமலர்களின் நறுமணங்களை உணரமுடியும். உற்சவ  மூர்த்தியாகிய அண்ணாமலையார் உமையாளுடன் கார்த்திகை தீபத்தின் அடுத்த நாளும், திருவூடல் விழாவின்போதும் வலம் வரும்  தனிப்பெரும் பேறு பெற்றது திருவண்ணாமலை எனும் கிரிவலமலை. 
 
அஷ்ட திக்கு பாலகர்களும் வலம் வந்து வழிபட்ட புனித மலை. ஆயுட் காலத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித்  தொல்லையை காக்க கூடியது திருநள்ளாறு. பிணிகளை போக்குவது வைதீஸ்வரன் கோயில். ஆனால் ஊழ்வினை நீங்கி பெருவாழ்வு பெற  அண்ணாமலையார் குடிகொண்டுள்ள திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதாலேயே அடைய முடியும். பிறவிப்பிணி நீங்கச் செய்யும்  வல்லமை கிரிவலத்துக்கு மட்டுமே உண்டு.
 
மலை வலம் செல்ல ஒரடி எடுத்து வைத்தாலே ஓரு யாகம் செய்த பலனை பெருவோம், ஈரடி எடுத்து வைத்தால் ராஜசூய யாக பலனை பெருவோம். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனை பெறுவோம். நான்கடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களையும்  நிறைவேற்றிய பலன் பெறுவோம் என்பது சித்தர்களின் வாக்கு.
 
உள்ளீடற்ற உன்னதமான மலையில் இருந்து சிவந்த ஜோதி கதிர்கள் எப்போதும் வெளிபடுவதை உணர்ந்து உலகுக்கு உணர்த்தியவர் மகான்  ரமணர். பவுர்ணமி நாட்களில் அது பன்மடங்காக வெளிப்படுகிறது. மலைவலம் வருவோர் அதன் பயனை உணர்கின்றனர்.
 
  மலைச்சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்கின்றனர் சிவனடியார்கள். மலைவலம் தொடங்கும் முன்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்னீராட வேண்டும். திருநீறு அணிந்து, ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை  உச்சரித்தபடியே செல்லவேண்டும். வெயிலுக்கோ, மழைக்கோ அஞ்சி குடை பிடித்து செல்வது பாவம்.

மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலை வலம் தொடங்குவது சிறப்பு. இயலாதோர் தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்யலாம். கோபம் பாவம் போன்ற எதிர்வினை உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஓருமித்த  சிந்தையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.