புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (20:57 IST)

விவசாய கடனை, கொலை செய்ய வாங்கிய பணமா என காவல்துறை மிரட்டல்: விவசாயி தற்கொலை

விவசாயத்திற்கு வாங்கிய கடன் பணத்தை, கொலை செய்ய உனக்கு கிடைத்த கூலியா என காவல்துறை மிரட்டியதால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே கம்மாளன்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இது தொடர்பாக கம்மாளன்குளத்தை விவசாயியான ரமேஷ் [வயது 36] என்பவரையும் காவல்துறை விசாரித்துள்ளனர். இதற்கிடையில், கம்மாளன்குளத்தை சேர்ந்த சில விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் இனைந்து சேமிப்புக்காக சீட்டு நடத்தி வந்துள்ளனர். அதில் ரமேஷீக்கு இந்த முறை சீட்டு கிடைத்துள்ளது.

அதன் மூலம் அவர் கையில் கிடைத்த பணம் ஒரு லட்சத்து 10ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இதில், பெரும்பாலும் 500, 1000 ரூபாய் நோட்டுகள்.

இதனை மாற்றினால் தான் விவசாயத்திற்கு வாங்கிய கடன்களை கொடுக்க முடியும் என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன் ரமேஷ் இந்த பணத்தை அருகே உள்ள ராமையன்பட்டி இந்தியன் ஓவர்சீயஸ் வங்கியில் செலுத்த சென்றுள்ளார். வங்கியில் இந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டுள்ளனர்.

ரமேஷ் அதற்கான விவரத்தை வங்கி அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியுள்ளார். ஆனால், அவர்கள் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை. மேலும், இது குறித்து நெல்லை நகர குற்றப்பிரிவு காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர்.

காவல்துறையினர் ரமேஷை அழைத்து விசாரித்துள்ளனர். ரமேஷ் அவர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் ஏற்கவில்லை இந்த பணம், கொலை செய்ய உனக்கு கிடைத்த கூலியா என்று ரமேஷயைும் அவர் குடும்பத்தையும் வீட்டிற்கு வந்தும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தும் மிரட்டியுள்ளனர்.

கடன் வாங்கி விவசாயம் செய்யும் ரமேஷ் தனது பணத்தை மாற்றி எப்படி கடனை கொடுக்க என்ற குழப்பமும், காவல் துறையினரின் தொடர் மிரட்டல் காரணமாகவும் மிகுந்த மனஉளச்சலுக்கு உள்ளாகி வியாழன் அன்று [24.11.16] விஷம் குடித்துள்ளார்.

உடனே அவரை திருநெல்வேலி அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், ரமேஷ் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார்.

ரமேஷ் தலித் சமுகத்தை சார்ந்தவர் என்பதால் காவல்துறையினர் மிகவும் மோசமாக சாதியரீதியாக அனுகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால்தான் ரமேஷ் தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ரமேஷீக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் தொந்தரவினால் இளம் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.