சுவாதி கொலையில் ஜெயலலிதா மவுனம் ஏன்? - எச்.ராஜா கேள்வி
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுவாதி கொலை வழக்கில் மவுனம் காப்பது ஏன்? என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய எச்.ராஜா, ”கடந்த ஆண்டு இதே தினத்தில்தான் ஆம்பூர் கலவரம் நடைபெற்றது. ஆம்பூர் கலவரத்தில் சேதமடைந்த பொது சொத்துகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன்.
நீதிமன்றத்தில் 60 நாள்களில் இழப்பீட்டுத் தொகை தருவதாகக் கூறிய தமிழக அரசு இதுவரை தரவில்லை. இதனால், அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவதைத் தவிர வேறுவழியில்லை.
அண்மையில் சாலை விபத்தில் மரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் செய்தி அனுப்பி, நிவாரண நிதி வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுவாதி கொலை வழக்கில் மெளனம் காப்பது ஏன்?
அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்காதது துரதிஷ்டமானது. இதுகுறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். தமிழக காவல் துறையினர் உண்மை, நேர்மை உணர்வோடு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.
சுவாதியின் வழக்கை நேரிடையாக உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டு ஒரு சிறப்புக் குழு மூலமாக வரையறைக்குள்பட்ட நாள்களுக்குள் விசாரித்து, நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். இதேபோல, காவல் துறையினரின் அலட்சியப்போக்குதான் சேலம் வினுப்பிரியா தற்கொலைக்கு காரணம்” என்று கூறியுள்ளார்.