திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (15:15 IST)

வெற்று விளம்பர வார்த்தைகள் எதற்கு.? பள்ளிகளில் நடக்கும் ஜாதி மோதல்களை தடுங்கள்.! இபிஎஸ் ஆவேசம்..!!

edapadi
வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 
சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை என்று எடப்பாடி கூறியுள்ளார்.

 
எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.