ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (14:31 IST)

டிடிவி தினகரன் டெல்லியில் கைது?: கசியும் பரபரப்பு தகவல்!

டிடிவி தினகரன் டெல்லியில் கைது?: கசியும் பரபரப்பு தகவல்!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு டிடிவி தினகரன் இன்று டெல்லி சென்றார்.


 
 
சில நாட்களுக்கு முன்னர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி போலீசார் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், அதில் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றதாகவும் கூறினார்.
 
இதனையடுத்து தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும் சம்மனை கடந்த புதன் கிழமை டெல்லி போலீஸ் அதிகாரிகள் நேரடியாக சென்னை வந்து தினகரனிடம் அளித்தனர்.
 
இதனையடுத்து இன்று நண்பகல் டிடிவி தினகரன் டெல்லி சென்றடைந்தார். அவர் பிற்பகல் 3 மணியளவில் குற்றப்பிரிவு போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த விசாரணையின் போது தினகரனிடம் என்ன மாதிரியான கேள்விகளை கேட்க வேண்டும் என்பதை டெல்லி போலீசார் ஏற்கனவே தயார் செய்து வைத்துவிட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷையும், தினகரனையும் ஒன்றாக வைத்தும் விசாரணை செய்யப்போவதாக கூறப்படுகிறது.
 
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பது இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரும், டிடிவி தினகரனும் போனில் பேசிக்கொள்ளும் தொலைப்பேசி உரையாடலையும் காட்டி தினகரனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது தினகரன் அளிக்கும் பதிலை பொறுத்து அவரை உடனடியாக கைது செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.