திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (14:46 IST)

கைதி சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்.! வேலூர் சிறை அதிகாரி புழல் சிறைக்கு மாற்றம்.!!

Vellore Jail
சிறையில் கைதி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எதிரொலியால் வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  
 
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை, டிஐஜி உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும், அப்போது வீட்டில் இருந்த நகைகளை அவர் திருடியதாக கூறி கொடுமைப்படுத்தியதாகவும் சிவக்குமாரின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 
 
மனு மீதான விசாரணையின்போது, சிறையில் இருந்த கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு காவல்துறையினர் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. மேலும், நீதிமன்ற உத்தரவின் படி, சிவக்குமார், வேலூர் சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் நேற்று வேலூர் மத்திய சிறைக்கு வந்தனர். அங்கு கைதி சிவக்குமார் அடைக்கப்பட்டிருந்த அறைகளை ஆய்வு செய்தனர். பின்னர் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேரிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 

14 பேரிடம் நடத்திய விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் சிறையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் இன்று சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடைய இடத்துக்கு புழல் சிறையிலிருந்து பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.