ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (11:26 IST)

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிடவேண்டும்: தமிழக அரசு கடிதம்

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

காகித வடிவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டதால், ஒரே நபர் பல முகவரிகளில் அதிக கார்டுகள் வாங்கினர் எனவும், அதனால் உபரி பொருட்களை கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன.

இதனைத் தடுக்கும் வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, விழி, விரல் ரேகை அடங்கிய ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்’ வழங்கப்பட்டன. இதனால் ஒரே நபர், கூடுதல் ரேஷன் கார்டு வாங்குவது தடுக்கப்பட்டதுடன், உறுப்பினராக ஒரு கார்டில் மட்டுமே பெயர் இருக்கும் வகையில் உருவானது.

கிடங்கில் இருந்து உணவு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது முதல் மக்களுக்கு விநியோகம் செய்வது வரை அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர், எந்த கடையிலும் தங்களின் பொருட்களை வாங்கி கொள்ளும் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மற்ற மாநிலங்களில் பொருளாதார அடிப்படையில் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறதென்றும், ஆனால் தமிழகத்தை பொருத்த வரை மக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறதென்றும் பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்றும், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையில் பிற மாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வந்தால், அந்த சலுகைகளை பெறக்கூடும் என்ற வகையில் இந்த வேறுபாட்டை தவிர்க்க மத்திய அரசு ஓராண்டிற்குள் நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தற்போது தமிழக அரசு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிடுமாறு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப் போவதாக வெளிவந்த செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.