திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (12:26 IST)

மதுரைக்கு இ-பாஸ் எடுத்த சூனாபானா? – அடேங்கப்பா என்ன ஒரு ப்ளான்!

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக செல்ல இ-பாஸ் அவசியம் என கூறப்பட்டுள்ள நிலையில் சூனாபானா என்ற பெயரில் ஒருவர் இ-பாஸ் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது. முன்னதாக குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே  இபாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதிகமானோருக்கு இ –பாஸ் கிடைக்காமல் போவதாலும், இடைத்தரகர்கள் பலர் இதன் மூலமாக முறைகேடுகளில் ஈடுபடுவதையும் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.

இ-பாஸ் தானியங்கு முறையில் வழங்கப்படுவதால் பெயர்கள், வண்டி எண் குறித்த சோதனைகள் இன்றியே இ-பாஸ் அனுமதியை தானியங்கு முறை வழங்குகிறது. இந்நிலையில் திருப்பூரிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி செல்ல வடிவேலுவின் நகைச்சுவை பாத்திரமான சூனாபானா என்ற பெயரில் இ-பாஸ் பெறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெயர் சங்கி மங்கி என்றும், வண்டி எண் 0000 என்று பதிவிட்டு அந்த இ-பாஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இ-பாஸை விண்ணப்பித்தது யார் என்று தெரியாத நிலையில், மக்கள் அவசரத்திற்கு எடுக்கும் இ-பாஸ் விவகாரத்தில் சிலர் இப்படி விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வதையும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.