வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (15:16 IST)

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி..! – கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்திற்குள் பார்வையாளர்களாக 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

பார்வையாளராக பங்கேற்கும் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.

மைதானங்களில் காளைகளை அடக்க சுழற்சி முறையில் மொத்தம் 300 வீரர்களுக்குள் அனுமதிக்கப்படலாம். மாடுபிடி வீரர்களும் தடுப்பூசி செலுத்தியிருத்தல் அவசியம்.

ஜல்லிக்கட்டில் இடம்பெறும் காளைகளை நிர்வகிக்க மாட்டின் உரிமையாளருடன், உதவியாளராக மற்றொரு நபர் அனுமதிக்கப்படுவார். இருவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.

மேலும் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும்.

இதுதவிர மாடுபிடி மைதானத்தில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.