1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (12:30 IST)

ஸ்டாலின் இலவு காத்த கிளி; எடப்பாடி அமாவாசை: ரஜினியின் அரசியலை தமிழருவி மணியன் செய்கிறாரா?

ஸ்டாலின் இலவு காத்த கிளி; எடப்பாடி அமாவாசை: ரஜினியின் அரசியலை தமிழருவி மணியன் செய்கிறாரா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக சற்று பலவீனமடைந்துவிட்டது. இந்த அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு விரைவில் வருவார் என கூறப்படுகிறது.


 
 
முன்பு இல்லாததைவிட இந்தமுறை ரஜினி அரசியலில் வேகம் காட்டுகிறார். ரஜினியின் அரசியல் முன்னோட்டமாக காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். செல்லும் இடங்கள், நடத்தும் கூட்டங்கள், அளிக்கும் பேட்டிகள் என அனைத்திலும் ரஜினியின் அரசியல் குறித்து தான் பேசுகிறார் தமிழருவி மணியன்.
 
இந்நிலையில் நேற்று திருச்சியில் தமிழருவி மணியன் நடத்திய பொதுக்கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் மற்றும் திமுக, அதிமுக கட்சிகள் குறித்து பேசினார் தமிழருவி மணியன்.
 
தமிழருவி மணியன் பேசியதாவது:-
 
நிச்சயமாக அரசியலுக்கு வருவது என முடிவெடுத்து விட்டேன். இது ஆண்டவன் எனக்கு இட்ட கட்டளை என்று ரஜினி என்னிடம் சொன்னார். காவிரி பிரச்சினை உட்பட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளை 10 ஆண்டுகளில் தீர்த்து வைப்பதே என் முதல் கனவு என்றார் ரஜினி. ஊழலற்ற அரசை அமைப்பது தான் எனது இரண்டாவது கனவு என்றார் ரஜினி.
 
இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கவுண்டவுன் இந்த திருச்சி மாநாட்டிலிருந்து தொடங்குகிறது. இரு திராவிட கட்சிகளையும் வங்க கடலில் கொண்டு போய் தள்ளுவதுதான் எனது கடமை. ஸ்டாலின் இலவு காத்த கிளி போல முதல்வர் பதவிக்காக கடைசி வரை காத்துக்கொண்டே இருப்பார். அதிமுக என்ற கட்சி இப்போது கிடையாது. ஜெயலலிதா மறைந்ததோடு அதிமுக சகாப்தம் முடிந்துவிட்டது.
 
நாளை ரஜினிகாந்த் வெற்றி பெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர வைக்கவே இந்த மாநாடு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசை நாகராஜன் போன்று சசிகலா குடும்பத்திடம் தேங்காய் பொறுக்கி கொண்டிருந்தவர். இதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என பேசினார் தமிழருவி மணியன்.