திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (13:36 IST)

அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம் – ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தவிர்ப்பு !

திமுக பொதுச்செயலாளர் க அன்பழகனின் உடல்நிலை மிக மோசமாக உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன் தினம் இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என சொல்லப்படுகிறது. அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

96 வயதாகும் அவர் வயது மூப்பு காரணமாக உடல்நிலை நலிவுற்று சில மாதங்களாக  ஈடுபடாமல் முழு ஓய்வில் இருந்து வந்தார். அவருக்கு அவ்வப்போது மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். இப்போது மருத்துவமனையில் இருக்கும் அவரை திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் நேரில் சென்று பார்த்து வந்துள்ளனர். இந்த செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என ஸ்டாலின் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதே நேரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.