வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (17:52 IST)

தேமுதிகவின் அறிக்கைக்கு செவிசாய்த்து ரூ.60க்கு தக்காளி விற்பனை- விஜயகாந்த்

தக்காளி விலை தற்போது சில்லறை விலையாக ரூ.150 என விற்பனை ஆகி வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலைவாசி உயர்வு குறித்து  நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ‘’ கடந்த ஜூலை 2 ஆம் தேதி தன் டுவிட்டர் பக்கத்தில், ''ஏற்கனவே அனைத்து விலைவாசிகளின் உயர்வால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காய்கறிகளின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கின்றனர்

பசுமை பண்ணை கடைகளில் விற்பனை செய்வது போன்று, அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மலிவு விலைக்கு விற்க தமிழக முதல்வர்   நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த  நிலையில், இன்று அமைச்சர் பெரியகருப்பன், ‘’சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கும் என்றும்   பண்ணை பசுமை கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில் நியாய விலை கடைகளிலும் அதே விலை விற்பனையாகும்’’ என்று அறிவித்திருந்தார்.

இதுகுறித்து நடிகர்  விஜயகாந்த் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’கடந்த ஒரு வாரமாக சென்னையில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. பசுமை பண்ணை கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க தேமுதிக சார்பில் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தேன்

எனது அறிக்கைக்கு செவி சாய்த்து தற்போது சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

அதேசமயம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும். தக்காளியின் பற்றாக்குறையை போக்கி அதன் விலையை குறைக்க   தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ''என்று தெரிவித்துள்ளார்.